புதுச்சேரியில் 3 நாள் சர்வதேச பட விழா - ‘பாரடைஸ்’ உள்ளிட்ட படங்களை இலவசமாக பார்க்கலாம்!

புதுச்சேரியில் 3 நாள் சர்வதேச பட விழா - ‘பாரடைஸ்’ உள்ளிட்ட படங்களை இலவசமாக பார்க்கலாம்!
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம். சர்வதேச புகழ்பெற்ற பிரசன்ன விதனகே திரைப்பட உருவாக்கத்துக்கான சிறப்பு வகுப்பையும் நடத்துகிறார்.

இது தொடர்பாக புதுச்சேரி திரை இயக்கம் செயலர் ரவி சந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க திரை இயக்க நிர்வாகி ராமச் சந்திரன் ஆகியோர் இன்று கூறியது: "புதுச்சேரியில் அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் நாளை மாலை சர்வதேசத் திரைப்பட விழா 2024 துவங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்நிகழ்வில் இந்தியா, பிரான்ஸ், இலங்கை, துருக்கி, ஈரான், அமெரிக்கா, ஸ்வீடன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இவற்றை இலவசமாக பார்க்கலாம்.

திருவிழாவின் தொடக்கமாக, அண்மையில் வெளி வந்த ‘பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு 7 மணிக்கு திரையிடப்படும். இப்படத்தை இயக்கிய சர்வதேச புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதனகே முன்னதாக இவ்விழாவை தொடக்கி வைக்கிறார். இந்நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், திரை இயக்குநர் எம்.சிவக்குமார், திரைக் கலைஞர் ரோகிணி, தமுஎகச பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஆகஸ்ட் 3ம் தேதி அமெரிக்க திரைப்படம் நியூக்ளியர் நவ் காலை 9.30 மணிக்கு திரையிடப்படும். காலை 11.45 மணிக்கு திரைப்பட வடிவம் உருவாக்குதல் தொடர்பாக இயக்குநர் பிரசன்ன விதனகே சிவக்குமார் மோகனன் உடன் இணைந்து சிறப்பு வகுப்பு நடத்துகிறார். பின்னர் கலந்துரையாடலும், கேள்வி பதில் நிகழ்வும் நடக்கும். மதியம் 2.30 மணிக்கு சுவீடனின் ‘டிரையாங்கிள் ஆப் சேட்னஸ்’, திரைப்படமும் மாலை 5.45 மணிக்கு ‘லாபடா லேடீஸ்’ ஹிந்தி திரைப்படமும் திரையிடப்படும்.

ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு துருக்கியின் ‘அபவுட் டிரை கிரேசஸ்’ திரைப்படமும், மதியம் 2 மணிக்கு ஈரானின் ‘லெயிலாஸ் பிரதர்ஸ்’ திரைப்படமும் மாலை 6 மணிக்கு பிரான்ஸின் ‘தி டேஸ்ட் ஆப் திங்ஸ்’ திரைப்படமும் திரையிடப்படும். அதைத்தொடர்ந்து பார்வையாளர்கள் கருத்துகளை கேட்டறிவோம்." என்று அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in