Last Updated : 15 Dec, 2023 01:54 PM

 

Published : 15 Dec 2023 01:54 PM
Last Updated : 15 Dec 2023 01:54 PM

CIFF 2023 | ‘குக்கூன் ஷெல்’ முதல் ‘அமெரிக்கா’ வரை: டிச.16-ல் என்ன படம் பார்க்கலாம்? - பரிந்துரைப் பட்டியல்

தி டீச்சர்ஸ் லாங்கே படத்திலிருந்து ஒரு காட்சி.

Inside the Yellow Cocoon Shell (Bên trong vo kén vàng) | Dir: Phạm Thiên Ân | Viatnam, France, Singapore, Spain | 2023 |179' | Santham | 11.40 AM - ''புகழை அல்லது அதிர்ஷ்டத்தைத் தேடிச்சென்று சிலந்தி வலைப்பின்னலான பட்டுப்போன்ற உறைகளில் சிக்கிக்கொள்ளும் லார்வாக்கள்தான் நாம் என்பதைததான் இப்படத்தில் சிம்பாலிக்காக சொல்லியுள்ளேன்'' என்கிறார் இயக்குநர் பாம் தியென் ஆன். ஒரு எளிய கதையை எடுத்துக்கொண்டு நாம் இதுவரை பார்த்திராத அழகிய உலகை படம்பிடித்து காட்டியுள்ளார்.

ஒரு கார் விபத்து ஒரு சிறுவனை ஆதரவற்றவனவாக்கிவிடுகிறது. தியென் என்ற அந்த சிறுவன் துவண்டுவிடாமல் தனது வாழ்வின் கிளைகளைப் பற்றிக்கொள்கிறான். முப்பது வயதில் தன்னை வளர்ந்த நகரமான சைகோனை விட்டு வெளியேறுகிறான். தனது சொந்த ஊரின் அடையாளங்களைத் தேடி ஒரு புதிய பயணத்தை மேற்கொள்கிறான். இதில் அவன் காண்பது பலவித முரண்பாடுகளைத்தான். தன்னுடைய பழைய மனிதர்களை தனது காதலை கண்டைந்தபோது அவனுக்கு கிடைத்தது என்ன?

தற்போது வரும் படங்களில் ஒருவரின் வாழ்க்கையில் திடீர் பயணங்கள், புதிய இடங்கள், புதிய மனிதர்கள் என நமது லட்சியங்களை, கனவுகளை புரட்டிப்போடும்விதமாக அமைவதை பார்க்க முடிகிறது. அதன்வழியே வாழ்க்கையின் புதிய பரிணாமத்தையும் அடைவதை மாறியுள்ள இன்றைய புதிய சிந்தனைகளை உள்ளடக்கி அற்புதமான படங்கள் வருகின்றன என்பதற்கு 'இன்சைடு தி யெல்லா குக்கூன் ஷெல்' திரைப்படம் ஒரு நல்ல உதாரணம். வியாட்நாம், சிங்கப்பூர், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்த ஆண்டு கேன்ஸ் விருது பெற்றது.

The Teacher's Lounge (La ravissement) | Dir: Ilker Çatak | Germany | 2023 | 98' | WC | Santham | 5.10 PM - ஜெர்மனில் ஒரு நடுநிலைப்பள்ளியில் தான் படம் மையம்கொள்கிறது. பள்ளி மாணவர்களின் ஒரு எளிய கதை என்றும் சொல்லலாம். அதைவிட ஒரு மாணவர்கள் நலனே முக்கியம் என இயங்கும் பள்ளி ஆசிரியையின் கதை என்றும் இதனை சொல்லாம். காரணம் பள்ளியில் தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டு சம்பவங்கள் ஒட்டுமொத்த சமூக உறவுகளையும் குலைத்துப்போடும்போது இந்த ஆசிரியை அதனை கையாண்ட விதத்தில்தான் அவர் ஒரு உன்னதமான ஆசிரியை என்ற உயரத்தை எட்டுகிறார்.

.

பள்ளியில் தொடர்ச்சியான திருட்டுகள் நிகழ்கிறது. ஏழாம் வகுப்பு மாணவர்களுடனான இந்தப் பிரச்சினையால் ஆசிரியை மிகுந்த மன அழுத்ததிற்கு தள்ளப்படுகிறார். மாணவர்களுடனான நட்புறவு தடுமாறுகிறது. பெற்றோர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். பள்ளி ஊழியர்களே விசாரணை அதிகாரிகளாக மாறுகிறார்கள். இதனால் மற்ற சக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கோபமடைகிறாகள். இந்த சிக்கலான தருணத்தில்தான் ஆசிரியை கார்லா நடுநிலையாக நின்று செயலாற்ற தொடங்குகிறார். எல்லாவற்றையும் சரி செய்கிறார். ஒரு லட்சியவாத ஆசிரியரின் தலையீடு ஒரு பெரிய மோதலை தடுக்க முயல்கிறது. அர்ப்பணிப்புள்ள இளம் ஆசிரியையாக வரும் லியோனி பெனெஷ்ஷின் நடிப்பிற்காகவே உலகம் முழுவதும் ஏராளமான விருதுகளை குவித்திருக்கிறது இத்திரைப்படம்.

Footprints on Water | Dir: Nathaila Syam| U.K | 2023 | 107' | WC | Serene | 6.15 PM - புலம்பெயர்தல் என்பது வலசைப் போகும் பறவைகளைப் போன்றதல்ல. நாடு கடந்து செல்லுதல் என்பது கடுமையான சர்வதேச சட்டங்களுக்கு உட்படட ஒன்று, இந்த ராட்சத பல்சக்கரத்தில் சாமானியர்கள் சிக்கி சின்னாபின்னமாகும் நிலையை இப்படம் பேசுகிறது. வெளிநாடுகளில் அரசுப் பதிவுகளில் இடம்பெறாமல் வாழும் பலரின் இருப்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை சர்வதச சமூகத்தின் பார்வைக்கு முன்வைத்துள்ளார் லண்டன் வாழ் இந்திய பெண் இயக்குநர் நதாலியா சியாம். சட்டவிரோதமாக குடியேறிய தந்தை தனது காணாமல் போன மகளை தேடத் தொடங்குகிறார். ஆனால், போலீஸ் ரேடாரின் துணையின்றி அவளை கண்டுடிக்க வேண்டும் என்பதால் ரகசியம் காக்கிறார். ஆனால் தேடல் பல்வேறு சிக்கல்களை கொண்டு வருகிறது.

குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறியவர்களாக, சகோதரிகளான நதாலியா சியாமும் நீதா சியாமும் புலம்பெயர்ந்தோர் அனுபவிக்கும் வேரற்ற உணர்வை உண்மையிலேயே உணர்ந்தவர்கள். இங்கிலாந்தில் அந்த சகோதரிகள் வளர வளர, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஏற்படும் அவல நிலையை அனுபவிக்க நேரிடுகிறது, இப்படி வந்தவர்கள் சில நிறுவனங்களில் வேலைக்கு கூட சேரமுடியும். ஆனால் அந்த நிறுவனங்கள் பராமரிக்கும் பதிவேடுகளில் நமது பெயரே இருக்காது என்ற அதிர்ச்சியை ஜீரணித்துக் கொண்டுதான் அங்கு வாழ வேண்டும். பெயர் பதியாமல் நேர்மையற்ற முதலாளிகள் செய்யும் சுரண்டலையும் குறிப்பிடுவதுதான் தண்ணீரில் காலடித் தடம். இந்தியாவிலிருந்து வந்து சட்ட விரோத குடியேற்றத்தில் ஈடுபடுபவர்களின் அன்றாட வலிகளை தங்கள் சொந்த அனுபவங்களை இணைத்து இயக்கியுள்ளார் நதாலியா ஸ்யாம்.

America (America) | Dir: Ofir Raul Graizer | Israel, Germany, Czech Republic | 2022 | 127' | WC | ANNA | 11.45 AM - பல ஆண்டுகள் ஊர் பக்கமே திரும்பாமல் திடீரென ஊருக்கு வந்த பிறகு உறவுகளை சிலர் புதுப்பித்துக்கொள்ள முனைவார்கள். அதில் ஏற்படும் சிக்கல்கள் மிகவும் வினோதமானது. இப்படம் அப்படியான ஒரு பிரச்சினையையே மையமாக வைத்துள்ளது. இஸ்ரேலிலிருந்து சிகாகோவிற்கு வந்து 10 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சியாளராக வேலை செய்து வருபவர் இலே கிராஸ். ஒரு நாள், அவரது தந்தையின் வழக்கறிஞரிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது, அந்த வழக்கறிஞர் தொலைபேசியில், இலே கிராஸின் தந்தை இறந்துவிட்டார் என்பதையும், பூர்வீக வீட்டை மரபுரிமையாக இலே கிராஸ் பெற்றார் என்பதையும் தெரிவிக்கிறார். வேறு வழியின்றி ஊருக்கு திரும்புகிறார் எலே கிராஸ்.

அங்கே அவருக்குப் பிரியமான குழந்தைப் பருவ நண்பன் மற்றும் அவனுக்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள மிகப்பெரிய பூ விற்பனை அங்காடி நடத்தும் பெண்ணுடனான நட்பு... ஒரு சர்ரியல் கவிதையாக பரிணாமம் பெறுகிறது. மூவருக்குமான உறவுகளும்... பிரிவுகளும்... முக்கோணத்தின் எதிர்எதிர் முனைகளாக முறுக்கி நிற்கின்றன. கரோனா பெருந்தொற்று காலத்தில் தொடங்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே படமாக்கி முடிக்கப்பட்ட படம் என்றாலும் திரைக்கதை கோரும் சுதந்திரமான படப்பிடிப்புகளையும் உறவுகளின் சிக்கல்களை வாழ்வியலோடு இணைத்துப் பேசுவதற்கான வெளிப்புற காட்சியமைப்புகளையும் மிகுந்த சவால்களுக்கிடையில் இயக்குநர் ஓஃபில் ரவுல் கிராஸியர் செய்து முடித்திருக்கிறார். இதேபோன்ற உறவுப் பிரச்சைனைகளை மையப்படுத்திய இவரது முதல் திரைப்படம் 'கேக் மேக்கர்' 2019 ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x