

கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா, ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 54-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா,கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதில், 270-க்கும் அதிகமானப் படங்கள் திரையிடப்பட்டன. சர்வதேச பிரிவில் 198 படங்கள் திரையிடப்பட்டன. இந்தியன் பனோரமா பிரிவில் வெற்றிமாறனின் 'விடுதலை', ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை', சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீல நிற சூரியன்' ஆகிய தமிழ்ப் படங்கள் உட்பட 25 படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழா 28-ம் தேதி நிறைவு பெற்றது. நிறைவு நாளில், சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த படத்துக்கான தங்க மயில்விருது, அப்பாஸ் அமினியின் 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' என்ற பாரசீக படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருது ரூ.40 லட்சம், சான்றிதழ் மற்றும் தங்க மயில் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை 'பிளாகாஸ் லெசன்ஸ்' படத்துக்காக பல்கேரிய இயக்குநர் ஸ்டீபன் கோமண்டரேவ் பெற்றார். 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பவுரியா ரஹிமி சாமுக்கு வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. ‘காந்தாரா' படத்துக்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.