Last Updated : 01 Sep, 2023 05:41 PM

 

Published : 01 Sep 2023 05:41 PM
Last Updated : 01 Sep 2023 05:41 PM

உலகத் திரையை உலுக்கியவர்கள் 1 - போரின் கசப்புக்கு மருந்தான ஆன் ஹங் ட்ரான் | வியட்நாம்

இயக்குநர் ஆன் ஹங் ட்ரான்.

பாலைவனத்தில் உச்சபட்ச தாகத்தோடு நடந்து செல்பவனுக்கு கைகளில் அள்ளிப் பருக சில்லென்று சிறு ஊற்றுநீர் கிடைத்தால் எப்படியிருக்கும்... அப்படி வியட்நாம் மக்களுக்கு கிடைத்தவர்தான் இயக்குநர் ஆன் ஹங் ட்ரான் (Anh Hung Tran). போர் முடிந்த பிறகு கூட அதையே நினைத்துக்கொண்டு அதையே படமாக எடுத்துக்கொண்டு அதன் இழப்புகளையே எந்நேரமும் அதன் வலியையே ரணங்களையே பேசிக் கொண்டிருந்தவர்களின் போக்கை மெல்ல மெல்ல மாற்ற வழி அமைத்தவர் ஆன் ஹங் ட்ரான்.

ஆரம்ப காலங்களில், அதாவது 30-களில் பெரும்பாலான வியட்நாம் படங்கள் கேலிக்கூத்து காமெடிகளாக இருக்கும். நீண்ட இடைவெளிக்கு, அதாவது போருக்குப் பிறகு வந்த படங்கள் போரின் ரணங்களையே பேசிக்கொண்டிருக்கும். சினிமா என்றால் என்ன, அந்த கருவியால் வேறு வேறு என்ன செய்ய முடியும் என்பதை வியட்நாமிய சினிமா உலகத்திற்கு தெரியாது என்பதைவிட, அதற்கான தேவை எதுவும் ஏற்படவில்லை என்றே அவர்கள் கருதினார்கள். ஆனால், மனித வாழ்க்கை என்பது சுகமும் துக்கமும் கலந்தது. அன்பும் ஆசாபாசமும் பிணைந்தது என்பதை ஆன் டிரான் தனது படங்கள் வழியே சுட்டிக்காட்டத் தொடங்கினார். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கு பிறகு ஒரு மாபெரும் திருப்பத்தை வியட்நாம் திரைப்பட உலகம் சந்திக்கத் தொடங்கியது.

ஆன் ஹங் ட்ரான் போரையோ அதற்கான தியாகங்களையோ பார்க்காதவரல்ல. அவர் பிறந்தது வியட்நாமில்தான். தனது இளம்பிராயத்தில் அவரது மனதில் போர் ஓர் ஆறாத வடுவாக தங்கிப்போனது. போரே அவர்களை நாட்டைவிட்டு வெளியேற வைத்தது. சைகோனை அமெரிக்கா வீழ்த்திய உடன் அங்கு வாழ முடியாத சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அவரது குடும்பம் பிரான்சுக்கு ஓடி தஞ்சமடைந்தது. அப்போது அவருக்கு வயது 12.

பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் தத்துவம் படித்தார். ஏதோ ஒரு வாய்ப்பில் பார்க்கக் கிடைத்த ராபர்ட் ப்ராஸனின் படம் ஒன்றை பார்த்த பிறகு மேற்படிப்பில் அதே கல்வியை தொடர வேண்டாமென முடிவு செய்தார். சினிமா மீதான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டு புகைப்படம், ஒளிப்பதிவு, இயக்கம் போன்றவற்றை முறையாக பயிலத் தொடங்குகிறார். பிரெஞ்சு சினிமா மற்றும் சில ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய திரைப்பட மேதைகளின் படங்கள் அளப்பரிய வாழ்வியல் அர்த்தங்கள் கொண்டிருந்ததைக் கண்டு வியக்கிறார்.

தன்னுடைய வியட்நாம் நாட்டில் ஏன் மோசமான படங்களே உருவாக்கப்படுகிறது. உண்மையின் அதன் பின்னணியிலிருந்து உருவாக வேண்டிய சினிமா எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை பெர்க்மேன், ப்ரெஸ்ஸான், குரோசாவா, தர்கோவ்ஸ்கி மற்றும் ஓஸு போன்ற இயக்குநர்களிடமிருந்து அவர்களின் படங்களைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கற்றுக்கொண்டார். தனது திரைப்பட அகாடமி ஆசிரியர்களுடன் உரையாடி முழுமையாக கற்றுக்கொண்ட பிறகு களத்தில் இறங்குகிறார் ட்ரான்.

வியட்நாமிய திரைப்பட வரலாற்றின் மறுமலர்ச்சிப் படங்களாக முக்கியமாக மூன்று திரைப்படங்களை சொல்கிறார்கள், தி சென்ட் ஆப் கிரீன் பப்பயா (The Sent of Green Papaya /1993) , சைக்லோ (Cyclo /1995), தி வெர்டிகள் ரே ஆப் தி சன் (The vertical ray of the sun /2000) ஆகிய இந்த மூன்றுமே ட்ரான் எடுத்த படங்கள்தான். இப்படங்களுக்கு வியட்நாம் டிரையாலஜி என்று பெயர் பெற்றிருக்கிறது. இந்த மூன்று படங்களும் வியட்நாமிய அரசாங்க பிரச்சாரத்தின் ஒரு மாதிரியாக கரடு தட்டிப்போன போர்பாதிப்புப் படங்களுக்கு மாற்று திரைப்படங்களாக அமைந்தன. மேலும் இன்றுள்ள நவீன சினிமாவுக்கான அடித்தளமாகவும் அமைந்தன.

இவரது நார்வேஜியன் வுட் (Norwegian Wood Anh Hung Tran2010) திரைப்படம் இக்கால காதல் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை பேசியுள்ளது. புகழ்பெற்ற ஜப்பானிய நாவலசிரியரான ஹாருகி முரகாமியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இஸ்தான்புல் சர்வதேச திரைவிழா, ஏசியன் பிலிம் அவார்ஸ, துபாய் சர்வதேச திரைவிழா, டொரான்டோ திரை விழாக்களில் சிறந்த படத்திற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை பெற்றதோடு வெனிஸ் திரைவிழாவில் தங்க சிங்கம் விருதுபெற்றது.

தி சென்ட் ஆப் கிரீன் பப்பயா (1993) மிக மிக முக்கியமான படம் என்கிறார்கள். இத்திரைப்படத்தில் முய் என்ற சிறுமியின் கண்கள் வழியே அகன்ற கோணத்தில் வியட்நாம் வாழ்க்கை நம் கண்முன் விரிகிறது. குடும்ப வறுமைக்காக ஆடம்பரமிக்க பணக்கார வீட்டுக்கு வேலை வரும் அவள் அந்த வீட்டின் ஆறு பேருக்கு பணிவிடை செய்ய வேண்டியுள்ளது. அந்த வீட்டில் உள்ள ஒரு சிறுவன் அவளை கிண்டலும் கேலியும் செய்கிறான். இன்னொரு சிறுவனின் மூத்த சகோதரன் அவளிடம் அன்பாக நடந்துகொள்கிறான். புல்லாங்குழல் இசைத்து அவளை மகிழ்விக்கிறான். வேலைக்கார சிறுமி முய், குடும்பத்தின் வயதான வீட்டுப் பணிப்பெண்ணின் வழிகாட்டுதலில் அந்த வீட்டில் காய்த்து தொங்கும் பச்சைப் பப்பாளியை எப்படி சுவைபட சமாளிப்பது என்பதை தெரிந்துகொள்கிறாள், முய் தனது அன்றாட கடமைகளில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வீட்டிலுள்ள அனைவருக்கும் பிடித்துப்போகிறது. தனது மகளை நோய்க்கு பறிகொடுத்த நிலையில் அந்த வீட்டு முதலாளியம்மா காலப்போக்கில், வளர்ந்துகொண்டிருக்கும் முய்யை தனது மகளாகவே பாவிக்கிறாள்.

அரவணைப்பு உயரும் நிலையில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளில் குடும்பத்தில் எதிர்பாரா திருப்பம் ஏற்படுகிறது. முதலாளி பெண்மணியின் கணவன் ஊதாரி ஜவுளி வியாபாரம் படுத்துவிட குடும்பம் வீழ்ச்சியை சந்திக்கிறது. அவளை வேலைக்காக உடன் வைத்துக்கொள்ளமுடியாத வறுமைக்கு குடும்பம் செல்கிறது. முய் பாதை திசை மாறுகிறது. மற்றபடி தடுமாறவில்லை. அவள் இன்னொரு செல்வாக்குமிக்க இளம் பியானோ இசைக்கலைஞன் வீட்டுக்கு வேலைக்கு வருகிறாள். அவர் அவளது பழைய முதலாளி குடும்பத்தில் இசைப்பிரியனாக இருந்த மகனின் நண்பர்தான்.

அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில்தான் முயி அங்கு வேலைக்கு வருகிறாள். அந்த வீட்டு தோட்டத்தில் உள்ள பப்பாளி மரத்தில் பச்சைப் பப்பாளி காய்த்துள்ளது. அங்கு அவளின் வாழ்க்கை வேறொரு பரிமாணத்தை அடைகிறது. சைகோன் நகர பழங்கால தன்மை மிக்க கடைவீதிகள், மரங்கள் நிறைந்த திறந்தவெளி வீடு அதன் லேட்டிஸ்வொர்க் சாளரங்கள், வேலைப்பாடு மிக்க மரத்தடுப்புகள், ஓவியங்கள் தீட்டப்பட்ட பீங்கான் குவளைகள், தத்திச் செல்லும் தோட்டத்துத் தவளைகள், பாரம்பரிய வீடுகள் என அழகியல் தன்மையிலான காட்சிக்கோணங்கள் நிறுத்தி காட்டப்பட்டுள்ளது.

இப்படத்தில் வியாட்நாமின் அன்றைய அரசியல் அடக்குமுறைகள் வெளிப்படையாக இல்லையெனினும் தூரத்து சித்திரமாய் ஆங்காங்கே சித்தரிப்பதுதான் ஆன் ஹங் ட்ரானின் பாணி. கேன்ஸ் திரை விழாவில் முதன்முதலாக 'இயக்குநரின் சிறந்த திரைப்படம்' என்ற பிரிவு தொடங்குவதற்கு இப்படம் காரணமாக அமைந்தது. மேலும் வியாட்நாம் சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கருக்கும் Schent of Green Papaya பரிந்துரைக்கப்பட்டது.

| தொடரும்... |

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x