

சில கதைகளைக் கேட்கும்பொழுது இதையெல்லாம் திரைப்படமாக்க முடியுமா? அப்படியே திரையில் கொண்டு வந்தாலும் அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா? என்று நினைத்துவிடக்கூடிய கதைக்களத்தை எடுத்து திரைக்கதை அமைத்து அருமையான திரை அனுபவத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் அன்னிமேரி ஜசீர். தனது தங்கையின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுக்க அப்பாவுடன் செல்கிறான் ஷாதி. அங்கே ஏற்படும் அனுபவங்களே வஜீப்.
கேட்க மிக எளிமையான கதைக்குள் நிறைய சுவாரசியமான சம்பவங்களையும் பாலஸ்தீன மக்களின் தற்போதைய நிலையையும் திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். காலையிலேயே தங்களது பழைய காரை எடுத்துக்கொண்டு அப்பாவும் மகனும் ஒவ்வொருவரின் வீடாக செல்வதில் இருந்து குறும்பும் நகைச்சுவையும் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் உறவினர்களை எதிர்கொள்ளும்போதும் அவர்களது கேள்விகளுக்கு மாற்றி மாற்றி பதில் சொல்லும்போதும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். உறவினர்களின் கேள்விகளும் உபசரிப்புகளுமாய் ஒவ்வொரு வீட்டிலும் அப்பாவுக்கும் மகனுக்குமான புரிதலும் வளர்கிறது. சில வீடுகளில் பயங்கரமான கவனிப்பும் சில வீடுகளின் வாசலையே தாண்டாமல் வருவதும் உறவினர்களின் மனநிலையை உருவகப்படுத்துகின்றன.
ஒவ்வொரு உறவினர் வீடாக செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் விதத்தினை வைத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் அரசியல் நிலைப்பாடு வரை தெரியப்படுத்துகிறார் இயக்குநர். மகனைப் பற்றி அப்பா உறவினர்களிடம் சொல்லி வைத்ததை ஷாதி எதிர்கொள்ளும் காட்சிகள், இப்படி நிறைய ரகளையான காட்சிகள் இருக்கின்றன. இதனூடே இஸ்ரேலிலும் சரி மற்ற இடங்களிலும் பால்ஸ்தீனர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதையும் சொல்லத் தவறவில்லை. சிலர் இஸ்ரேலுடன் ஒத்து வாழ்வதை விரும்புகின்றனர். சிலர் இஸ்ரேலில் இருந்து வெளியேற விரும்புகின்றனர், ஆனால் அவர்களுக்கு போக்கிடம் என்பது கிடையாது என்பதையும் உரையாடல்களும் மூலமாக தெரியப்படுத்துகிறார் இயக்குநர். டிசம்பரில் திருமணம் நடக்கவிருப்பதால் அழைப்பிதழ் கொடுக்க செல்லும் உறவினர்களின் வீட்டிலெல்லாம் கிறிஸ்துமஸுக்கான தயாரிப்புகள் நடக்கின்றன. இத்தாலியில் இருந்து வந்த ஷாதியிடமும் கிறிஸ்துமஸுக்கான ஏற்பாடுகளை யாரும் கேட்காமல் இல்லை. அவர்கள் அனைவரும் பாலஸ்தீனர்கள் என்பது ஆச்சரியத்தை கொடுக்கலாம்.
அப்பாவும் மகனும் எதிரெதிர் துருவங்களாக இருக்கின்றனர். கருத்து, கொள்கை, சினிமா, இசை என எல்லாவற்றிலும் இருவருக்கும் வேறு வேறு பார்வைகள். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒருவருக்கொருவர் காட்டும் அன்புதான் அவர்களது பயணத்திற்கான உந்துகோல். அப்பா என்ன சொன்னாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எளிதாக எடுத்துக்கொள்ளும் மகன், மகனின் அறிவுரைகளையும் கிண்டல் செய்யும் அப்பா என இருவரது உரையாடல்களில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.
அப்பாவும் மகனும் இஸ்ரேலைப் பற்றியும் பாலஸ்தீனர்களின் நிலையைப் பற்றியும் வெளிப்படையாக காட்டமாக உரையாடிக்கொள்ளும் காட்சியும் அதன்பிறகு வரும் காட்சிகளும் இயக்குநரின் முத்திரை. இஸ்ரேலில் பாலஸ்தீனர்களின் நிலை யூதர்களுக்கு அடங்கியே இருக்கிறது என்பதை அப்பா கதாபாத்திரம் மூலம் சொல்கிறார் இயக்குநர். இஸ்ரேலில் இருப்பதையே வெறுப்பதன் மூலம் பாலஸ்தீனர்களுக்கான விடுதலையை, தேசத்தை தேடுகிறான் ஷாதி. ஆனால் யாதர்த்தம் என்னவாக இருக்கிறது என்பதை அப்பாவின் சொற்கள் வழியே அவன் புரிந்துகொள்ள முயல்வதும் அதன் பின்னான காட்சிகளும் கிளாசிக். ஆனால் அதனை அவன் ஏற்றுக்கொண்டானா இல்லையா என்பதை நீங்கள் வஜீப்பில்தான் பார்க்க வேண்டும்.
இஸ்ரேலிய ராணுவத்தினை சில நொடிகளே காட்சிப்படுத்தியிருந்தாலும் அதன் தீவிரத்தன்மையை சற்றும் குறையாமல் நமக்கு கடத்துகின்றனர். அதேபோன்று படம் முழுக்க சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அனைத்திலும் ஏதோ ஒரு பகடி ஒளிந்திருக்கிறது. மணமகளுக்கான உடைத்தேர்வு செய்யும் காட்சியில் அப்பா, மகன், மகள் மூவருக்கும் இடையே நடக்கும் உரையாடலும் உடல்மொழியின் நுட்பமான அழகியலும் செம்ம. படம் முழுக்க நம்முடனே பயணிக்கும் அந்த கார் கூட அவ்வளவு அழகாக இருக்கிறது. இப்படி படம் முழுக்க அருமையான தருணங்கள் ஏராளம்.
நமது ஊரில் உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் நிகழ்வுகளை வஜீப் நிறைய இடங்களில் நினைவுப்படுத்துகிறது. ஆனால் அதனூடே அவர்கள் பேசியிருப்பது பாலஸ்தீனர்களின் நிலையை, அவர்களது அரசியல் செயல்பாடுகளை. இயல்பாக வாழ்ந்தாலும் அவர்கள் தன்னளவில் சுதந்திரமானவர்களாக இல்லை என்பதையே வஜீப் பகடியான காட்சிகளுடன் அழுத்தமாக பேசுகிறது.
பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற இத்திரைப்படம் கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் பாலஸ்தீனத்திலிருந்து சிறந்த வெளிநாட்டுமொழித் திரைப்பட விருதுக்காக 90வது ஆஸ்கார் விருதுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.