

‘அரசன்’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியிருப்பதாக பரவிய தகவலை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க தொடங்கப்பட படம் ‘அரசன்’. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்றது. தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படத்தில், சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், ‘அரசன்’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியிருப்பதாக செய்திகள் வெளியாகி பரவத் தொடங்கின. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்காதது, தன்னால் கொடுக்கப்பட்ட தேதிகள் வீணானது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து அவர் விலகியிருப்பதாகவும் அந்தத் தகவல்களில் கூறப்பட்டது.
அத்துடன், விஜய் சேதுபதிக்கு பதிலாக தெலுங்கில் இருந்து முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், ‘அரசன்’ படத்துக்காக ஒதுக்கிய தேதிகளை அப்படியே மாற்றி, தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு விஜய் சேதுபதி கொடுத்துவிட்டார் என்றும், அதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், ‘அரசன்’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியிருப்பதாக பரவிய தகவலை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ‘விஜய் சேதுபதி விலகியிருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை. ‘அரசன்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவுற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, மார்ச் முதல் வாரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கும். எனவே, விஜய் சேதுபதி விலகல் என்ற தகவல் வெறும் வதந்தி மட்டுமே’ என ‘அரசன்’ படக்குழு தெரிவித்துள்ளது.