

வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என தெரிகிறது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத்தா அல்லது யுவனா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இதனிடையே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதில் படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தத்தில் விஜய் ஆண்டனி கையெழுத்திடுவார் என கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் ஆண்டனி நடிக்கவிருப்பது குறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, இப்படத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று கிராபிக்ஸ் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி திரும்பியுள்ளது சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு கூட்டணி. விரைவில் படப்பூஜையுடன் கூடிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.