

பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.
இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டம், உதயகிரியில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்ற இவர், ‘மாயாபஜார்’ (1957) உள்பட சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் ‘நீதி நிஜாயிதி’ என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில், 60 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார், கமல்ஹாசன் ஆகியோருடன் அதிக நட்போடு இருந்த இவர், தமிழில், திக்கற்ற பார்வதி, ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், லிட்டில் ஜான், சின்ன வாத்தியார், மும்பை எக்ஸ்பிரஸ், காதலா காதலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக தனது 94-வது வயதில் ‘சிங் கீதம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். கடந்த ஜூன் மாதம் இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியானது.
நகைச்சுவை, சயின்ஸ் பிக்ஷன், ஃபேன்டஸி என ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான ஜானரில் இயக்கியுள்ள இவர், வசனமே இல்லாமல் இயக்கிய ‘பேசும்படம்’ (புஷ்பக விமானம்), மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், ஆந்திர அரசின் நந்தி விருதை 5 முறையும் கர்நாடக மாநில விருதுகளை 3 முறையும் பெற்றுள்ளார். இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றிருக்கிறார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். அவர் மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் இறுதிச்சடங்கு நெசப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
என்னைச் செதுக்கியவர்
சென்னையில் சீங்கீதம் சீனிவாசராவ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் கமல்ஹாசன் பேசும்போது, “நீண்ட நட்பு; நட்பு என்று சொல்வதற்கு எனக்கு வயது பொருந்தாது. ஆனாலும் அதுதான் எங்களுக்குள் இருந்த உறவு. சிங்கீதம் இளமையில் மாண்டுவிட்டார் என்றுதான் சொல்வேன். அவர் உடலுக்குத்தான் வயது அதிகம், மனது இளமையானது. அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் முக்கியமானவை. என் வாழ்க்கையில் என்னைச் செதுக்கிய பலரில் இவரும் ஒருவர். மனதில் பட்டதைச் சொல்லக் கூடியவர். அதுதான் அவர் இளமையின் பொருள், அவர் இளமையின் ரகசியமும் கூட” என்றார்.