பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்
Updated on
2 min read

தென்​னிந்​தி​யத் திரைப்பட உலகின் மூத்த நடிகை சவு​கார் ஜானகி உடல் நலக்​குறைவு காரண​மாக சென்​னை​யில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.

பழம்​பெரும் நடிகை​யான சவு​கார் ஜானகி, தமிழ், தெலுங்​கு, கன்​னடம் உள்பட பல்​வேறு மொழிகளில் 400-க்​கும் மேற்​பட்ட படங்​களில் நடித்​துள்​ளார்.

சென்னை ஆழ்வார்ப்​பேட்டை சென​டாப் சாலை​யில் வசித்து வந்த அவர், வயது மூப்பு மற்​றும் சுவாசப் பிரச்​சினை காரண​மாக கடந்த சில நாட்​களாகப் உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டிருந்​தார். புதன்​கிழமை இரவு அவருடைய உடல்​நிலை திடீரென மோச​மானதை அடுத்து ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்​கருவி உதவி​யுடன் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது. இந்​நிலை​யில் அவர் நேற்று பிற்​பகல் கால​மா​னார். அதைத்​தொடர்ந்​து, மருத்​து​வ​மனை​யில் இருந்து அவர் உடல் வீட்​டுக்கு கொண்டு செல்​லப்​பட்டு பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது.

அங்கு ஏராள​மான திரை​யுல​கினரும் பொது​மக்​களும் அவர் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர். சவு​கார் ஜானகி​யின் மறைவு தென்​னிந்​திய திரை​யுல​கத்​தினரை சோகத்​தில் ஆழ்த்​தி​யுள்​ளது. அவர் மறைவுக்கு சமூக வலை​தளங்​களில் ஏராள​மான ரசிகர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

சங்​கரமஞ்சி ஜானகி: சவு​கார் ஜானகி​யின் இயற்​பெயர் சங்​கரமஞ்சி ஜானகி. ஆந்​திர மாநிலம் ராஜ​முந்​திரி பகு​தி​யைச் சேர்ந்த வெங்​கோஜி ராவ் மற்​றும் சச்சி தேவி தம்​ப​தி​யின் மூத்த மகள் இவர். தந்​தை​யின் தொழில் காரண​மாக இவர்​கள் பல்​வேறு இடங்​களில் வசிக்க வேண்​டிய நிலை ஏற்​பட்​டது.

சென்​னை​யில் வசித்​த​போது, குழந்​தைகளுக்​கான வானொலி நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட அவர், வானொலி நாடகங்​களி​லும் பங்​கேற்​றார். நாடகத்​தில் ஜானகி​யின் குரலைக் கேட்ட தயாரிப்​பாளர் பி.என்​.ரெட்​டி, ‘குணசுந்​தரி கதா’ என்ற தெலுங்கு படத்​தில் நடிக்க அவரை அழைத்​தார்.

அதைக் கேட்​டதும் அவர் பெற்​றோர் அதிர்ச்சி அடைந்​தனர். அப்​போதெல்​லாம் பாரம்​பரிய​மான குடும்​பத்​தைச் சேர்ந்த பெண் ஒரு​வர் சினி​மா​வில் நடிப்​பது நினைத்து பார்க்​க முடி​யாத விஷ​யம். எனவே வாய்ப்பை பெற்​றோர் மறுத்​து​விட்​டனர். பின்​னர் உறவின​ரான சீனி​வாச ராவ் என்​பவருக்கு அவரை 1947-ம் ஆண்டு மணமுடித்து வைத்​தனர்.

அப்​போது ஜானகிக்கு வயது 15. கணவருடன் விஜய​வா​டா​வில் வசித்​தார். குழந்​தைக்​குத் தாயாகி விட்ட பின்​னர். குடும்​பச்​சூழல் காரண​மாக வேலை தேடும் நிலைக்கு தள்​ளப்​பட்​டார் ஜானகி.

முதன்​முறை​யாக திரைப்​படத்​தில் தனக்கு வாய்ப்பு தரு​வ​தாகச் சொன்ன தயாரிப்​பாளர் பி.என்​.ரெட்​டியை சென்​னை​யில் சந்​தித்​தார். அவர், தன் தம்பி நாகிரெட்​டி​யிடம் சிபாரிசு செய்​தார். அவர் என்​.டி. ராம​ராவ் நாயக​னாக நடித்த ‘சவு​கார்’ என்ற தெலுங்​குப் படத்தை தயாரித்​தார்.

எல்​.​வி.பிர​சாத் இயக்​கிய அந்​தப் படத்​தில் கதா​நாயகி​யாக அறி​முக​மா​னார் ஜானகி. அந்​தப் படம் இமாலய வெற்றி பெற்​றது. நீண்​ட​நாட்​கள் திரையரங்​கு​களில் ஓடிய அப்​படம், ‘பக்​கத்து வீட்​டுப் பெண்’ இமேஜை அவருக்கு கொடுத்​தது. இதைத் தொடர்ந்​து, அப் படத்​தின் பெய​ரான ‘சவு​கார்’ என்ற அடைமொழி அவருடன் இணைந்து ‘சவு​கார் ஜானகி’ ஆனார்.

பின்​னர், 1952-ம் ஆண்டு வெளி​யான ‘வளை​யாப​தி’ மூலம் தமிழ் சினி​மா​வில் அறி​முக​மான அவர், முன்​னணி நடிகை​யாக உயர்ந்​தார். ஆந்​தி​ரா​வில் வளர்ந்த பெண் என்​றாலும் இந்​தப் படத்​தில் பாவேந்​தர் பார​தி​தாசனின் வசனங்​களை சரள​மாகப் பேசக் கற்​றுக் கொண்டு திரை​யில் அசத்​தி​னார். வசன உச்​சரிப்​புக்​காக ரசிகர்​களின் கைதட்​டல்​களை​யும் பெற்​றார்.

அதைத் தொடர்ந்து அவர் நடிப்​பில் வெளி​யான படங்​களில், ‘படிக்​காத மேதை’, ‘பாலும் பழமும்’, ‘பணம் படுத்​தும் பாடு’, ‘பாமா விஜ​யம்’, ‘பு​திய பறவை’, ‘நீர்க்​குமிழி’, ‘மகாகவி காளி​தாஸ்’, ‘எதிர்​நீச்​சல்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘இரு கோடு​கள்’, ‘கா​வி​யத் தலை​வி’, ‘ரங்க ராட்​டினம்’, ‘தில்லு முல்​லு’, ‘வெற்றி விழா’ உள்​ளிட்ட பல படங்​கள் குறிப்​பிடத்​தக்​கவை.

இதில் ‘கா​வி​யத் தலை​வி’, ‘ரங்க ராட்​டினம்’ ஆகிய படங்​களை அவர் தயாரித்து நடித்​தார். எந்த மொழி என்​றாலும் அவரே டப்​பிங் பேசுவது அவருடைய சிறப்​பு. நாகேஸ்வர ராவ், என்​.டி.​ராம​ராவ், ஜக்​கை​யா, எம்​.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்பட அப்​போதைய முன்​னணி நடிகர்​களு​டன் இணைந்து நடித்​துள்​ளார்.

எம்​.ஜி.ஆர் நடித்த ‘ஒளி​விளக்​கு’ திரைப்​படத்​தில் எம்​ஜிஆர் உடல்​நலம் பெற வேண்டி ‘ஆண்​ட​வனே உன் பாதங்​களை...’ என்ற பாடலை இவர் பாடி இறைவனை வேண்​டு​வ​தாக காட்சி அமைந்​திருந்​தது. பின்​னாளில் எம்​.ஜி.ஆர் உடல்​நலம் பாதிக்​கப்​பட்டு அமெரிக்​கா​வில் சிகிச்சை பெற்​ற​போது, அவர் விரை​வில் நலம்​பெற வேண்டி தமிழகம் முழு​வதும் பட்​டிதொட்டியெங்​கும் இந்​தப் பாடல் ஒலிபரப்​பப்​பட்​டது.

தனது 70 ஆண்​டுக்​கும் மேலான திரைப் பயணத்​தில் நூற்​றுக்​கணக்​கான படங்​களில் கதா​நாயகி​யாக​வும், குணச்​சித்​திர நடிகை​யாக​வும் முத்​திரை பதித்​துள்​ளார். 400 படங்களுக்கு மேல் நடித்​துள்ள சவு​கார் ஜானகி, நாடகங்​களுக்​காக 300-க்​கும் மேற்​பட்ட முறை மேடை ஏறி​யிருக்​கிறார். அவர் கடைசி​யாக நடித்து வெளி​யான படம் சந்​தானம் நடித்த ‘பிஸ்​கோத்’.

ஆந்​திர அரசின் நந்தி விருது, தமிழ்​நாடு அரசின் கலை​மாமணி உள்பட பல்​வேறு விருதுகளைப் பெற்​றுள்ள இவருக்​கு, 2022-ம் ஆண்​டு, ‘பத்​ம’ விருது வழங்கி மத்​திய அரசு கவுர​வித்​தது. மறைந்த சவு​கார் ஜானகிக்​கு, யக்ஞ பிர​பா, சச்சி ஆகிய மகள்​களும் வெங்​கட்​ரமணா என்ற மகனும் உள்​ளனர். நடிகை வைஷ்ணவி இவருடைய பேத்​தி.சவு​கார் ஜானகி​யின் இறு​திச்​சடங்கு இன்று நடக்க இருக்​கிறது.

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்
‘மன உறுதி கொண்ட முன்னோடி’ - செளகார் ஜானகிக்கு பிரபலங்கள் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in