‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் ஜன.27-ல் தீர்ப்பு

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் ஜன.27-ல் தீர்ப்பு
Updated on
1 min read

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது.

இதை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவி்ட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து விசாரணையை ஜன.20-க்கு தள்ளி வைத்தனர்.

இதற்கிடையே இடைக்காலத்தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து படத்தயாரிப்பு குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதையேற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வையே நாட உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய தணிக்கை வாரியம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும், படத்தயாரிப்பு குழு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கில் ஜன.27-ம் தேதி காலை தீர்ப்பளிக்க உள்ளனர்.

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் ஜன.27-ல் தீர்ப்பு
சரியும் மக்கள் தொகையால் திணறும் சீனா: அரசின் கொள்கையும் சேதாரங்களும் - ஓர் அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in