

‘உறியடி’ விஜயகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அறிவு’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
இந்த டீசரின் தொடக்கத்தில் மாணவர்கள் அனைவரும் பாடம் படிக்கும் குரல் கேட்கிறது. தொடர்ந்து ஆளரவமற்றத் தெருவில் விஜயகுமார் பழைய சைக்கிள் ஒன்றில் வேகமாக வருகிறார். ஒரு கட்டத்தில் சைக்கிள் செயின் அறுந்து விட, கையறு நிலையில் அவர் இயலாமையில் கத்துகிறார். இதற்கு இடையில் கருப்பு வெள்ளையில் ஒரு சாமி சிலை, தீ பந்தங்கள் - வேல் கம்புடம் ஓடும் மனிதர்கள், தாக்கும் ஆயத்தத்துடன் அணிவகுக்கும் போலீஸ் படை என காட்சிகள் மாறி மாறி வருகின்றன.
கதைப் பற்றிக் கூறாமல் கல்வியின் அவசியத்தையும், மலை கிராமம் ஒன்றுக்கு அதை கொண்டு சேர்க்கும் போராட்டம் பற்றி காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்து படத்தின் மீது எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது இந்த 1.32 நிமிட டீசர்.
சத்யா சிவா இயக்கத்தில், ‘உறியடி’ விஜய்குமார் நடித்திருக்கும் படம் ‘அறிவு’. மூவிட்ரோன் நிறுவனம் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரித்து இருக்கும் இந்தப் படத்தில் கயல் ஆனந்தி, ஐ.எம்.விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசை அமைத்திருக்கும் படத்துக்கு, தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடைந்தது. டிசம்பர் 11 அன்று படம் வெளியாக இருக்கிறது.