

தமிழ் சினிமாவுக்கான அரசு ஓடிடி முதல் காவலர் விடுப்பு குறித்த கார்த்தியின் ஆதங்கம் முதல் இன்றைய திரைத் தெறிப்புகள் இது.
> தமிழ் சினிமாக்கவுக்கான அரசு OTT தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும். இது குறித்து நாம் அனைவரும் அமர்ந்து பேசி முடிக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாக பேசுவோம் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
> சினிமாத்துறை மீது அரசுக்கு தனிக் கவனம் உள்ளது. இனி மாநில அரசின் சார்பில் சினிமா விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படும். சிறு பட்ஜெட் படங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். வரிவிலக்கு போன்ற விஷயங்களை அறிவிக்க இருக்கிறோம் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
> படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியைப் பெற தலைமைச் செயலகத்தில் வந்து நிற்கும் நிலை இருக்கக்கூடாது என்பதற்காக அனுமதி நடைமுறைகள் நவீனமயமாக்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்பான விவரங்களை முறையாக அளித்து அனுமதி கோரினால் தானியங்கி முறையில் அனுமதி கிடைக்கும் என்று என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்
> ‘பருத்தி வீரன்’ படத்தைப் பார்த்துவிட்டு வேறொருவராக இருந்தால் கார்த்திக்கு பொண்ணு கொடுத்திருக்க மாட்டார்கள். அப்படியொரு ராட்சத வேஷம். நானே இருந்தாலும், பொண்ணு கொடுத்திருக்க மாட்டேன். எந்த நம்பிக்கையில் கார்த்திக்கு பெண் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று நடிகர் சிவகுமார் பேச்சு
> கார்த்திக் சுப்பாராஜின் ‘டோரதி’ திரைப்படம் ரொம்ப ஸ்பெஷல். இப் படத்தின் சினிமா மொழி மிக மிக நன்றாக, மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது. உண்மையிலேயே எனக்கு இவர் மீது பொறாமையாக இருக்கிறது. சினிமா மொழியின் மீதான கட்டுப்பாடு, காட்சி அமைப்புகள் மீதான கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துமே மிக அற்புதம் என இயக்குநர் மணிரத்னம் பாராட்டியுள்ளார்.
> சமீபத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தைப் பார்த்தேன். படத்தைப் பார்த்த பிறகு என்னால் ஒரு மணி நேரம் தூங்கவே முடியவில்லை. அந்தப் படம் எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை நினைவுபடுத்தியது. படத்தைப் பார்த்துவிட்டுப் படுத்திருந்தபோது, கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என நடிகர் சிவராஜ்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
> திரைப்படத்தில் நடிப்பதற்காக பெற்ற ரூ.40 லட்சத்தைத் திருப்பித் தரவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் பதிவான வழக்கில் நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரணுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்.
> கரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சையான கருத்தைத் தெரிவித்த வழக்கு ,முறையாக விசாரிக்கப்படாமல் தொடரப்பட்ட வழக்கு என நடிகர் மன்சூர் அலிகான் முறையிட்டதை அடுத்து வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
> காவலர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. ஆனால் இப்போது வந்துள்ள புது அரசு, காவலர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது. ஆனால் அது காகித அளவில் மட்டுமே இருக்கிறது. நிஜமாகவே காவலர்களுக்கு ஒருநாள் விடுப்புத் தர வேண்டும் என கோவையில் நடைபெற்ற முன்னாள் காவல் அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு.