

சினிமாவுக்கு இது கடினமான காலம் என்று திரைத்துறை பிரச்சினைகளை முன்வைத்து கார்த்திக் சுப்பராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
அப்பதிவில், “குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. நாளை வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நடிகரின், பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை தாமதமானதன் காரணமாக வெளியீடு தள்ளிப் போகிறது.
நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் மற்றொரு பெரிய பட்ஜெட் படமான ’பராசக்தி’ படத்திற்கு தணிக்கை வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.
சினிமாவிற்கு இது ஒரு கடினமான காலம்!
சுயாதீன மற்றும் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் அதிக ஆதரவளிக்க வேண்டும். ஏனென்றால் பெரிய டிவி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வருவாய்க்கான ஒரே ஆதாரமாக திரையரங்குகள் மட்டுமே உள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்காமல் இருப்பது, சினிமாவை அழிப்பதற்கு சமம்.
பெரிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை. இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தணிக்கைக்கான கடுமையான விதிகளைப் பின்பற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. இது குறிப்பாக, வெளியீட்டுத் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கும்போது, படத் தயாரிப்பாளர்களின் படைப்புச் சுதந்திரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டுத் தணிக்கைக்கான தற்போதைய காலக்கெடு விதிகளின்படி, ஒரு படம் முழுமையாக முடிக்கப்படுவதற்கு வெளியீட்டுத் தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.
இது பல காரணங்களால் சாத்தியமற்றது. இது சீரமைக்கப்பட்டு, படத் தயாரிப்பாளர்களுக்குச் சற்று எளிதாக்கப்பட வேண்டும். இது தணிக்கை வாரியம், தயாரிப்பாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என அனைவராலும் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பண்டிகை நாட்களில் பெரிய படங்கள் தள்ளிப்போவது இறுதியில் இந்தத் துறையையே அழித்துவிடும்.
திரைத்துறையினரே, நாம் அனைவரும் ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட நோக்கங்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த கலையைக் காப்பாற்ற, சினிமாவை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்ய ஒன்றிணைவோம்” என்று தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.