

டி.ராஜேந்தர் இயக்கத்தில் நளினி நாயகியாக அறிமுகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. கங்கா, ராதா ரவி, எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்தனர். 1983-ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.
படத்தில் இடம் பெற்ற இந்திரலோகத்து சுந்தரி, வைகைகரை காற்றே நில்லு, இதயமதை கோவிலென்றேன் உள்பட அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. இந்நிலையில், இப்படம் 43 வருடங்களுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பிப்.13-ம் தேதி மீண்டும் ரிலீஸ் ஆகிறது. இதற்கான விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ராதாரவி, நளினி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது, “இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஒரிஜினல் காப்பியை பைனான்சியர்களுக்கு போட்டு காண்பித்தேன்.
ஜெமினி லேபில் படத்தைப் பார்த்து விட்டு, நளினி, கதாநாயகியாக சரியாக வரமாட்டார்; அவருக்கு ‘நீட்டு முகம்’ என்று அவரை மாற்றச் சொன்னார்கள். ஆனால், அவரை கதாநாயகியாக்கி படம் எடுத்தேன். 4 ஆயிரம் அடி பிலிம் வாங்கி, நீட்டு முகம் என்ற சொன்னவர்களிடம் அவரை ‘நீட்’ முகமாக மாற்றினேன். நளினியின் தலைமுடியை விரித்துப் போட வைத்து, பேக் லைட்டில் வைத்து படமாக்கினேன்.
அந்த பேக் லைட் தான் என் கதாநாயகியின் ஹைலைட். பிறகு அவர்களுக்கு மீண்டும் படம் போட்டுக் காண்பித்தேன். படத்தைப் பார்த்து விட்டு, நீட்டு முகம் என்று யார் சொன்னார்களோ, அவர்களே கைதட்டினார்கள்.
இதை என் திறமைக்காகவோ, என் தலைக் கணத்துக்காகவோ சொல்லவில்லை. வாழ்க்கையில் யார், எப்போது, எப்படி வருவார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்பதற்காகத்தான் சொல்கிறேன்” என்றார்.