வாழ்வியல் கதைகள் இன்று படங்களாக வருவதில்லை: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேதனை

வாழ்வியல் கதைகள் இன்று படங்களாக வருவதில்லை: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேதனை
Updated on
1 min read

வாழ்வியல் கதைகள் இன்று படங்களாக வருவதில்லை என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேதனையுடன் குறிப்பிட்டார்.

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட் லேபில்’. இதன் கதையினை பொன்.பார்த்திபன் எழுதியிருக்கிறார். லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், தருண், கெவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் மற்றும் திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, “முதலில் இந்தத் தலைப்பை நான் பாராட்டுகிறேன். நல்ல அழகான தலைப்பு. தயாரிப்பாளர் லெனினை முதலில் பாராட்டுகிறேன். நான் கோயம்புத்தூர்காரனாக இருந்தாலும் எந்த கோயம்புத்தூர்காரரும் எனக்கு வாய்ப்பு கொடுத்ததில்லை. இவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். என்னிடம் வந்ததுமே முதலில் படம் தயாரிக்கிறாயா? யோசனை செய், எச்சரிக்கையாக இரு என்றுதான் நான் சொன்னேன்.

முதலில் அவர் நடித்த ‘உன் கூடவே’ என்கிற பாடல் ஆல்பத்தை பார்த்தேன். அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பாராட்டு கொடுத்த உந்துதலில் தயாரிப்பாளராக வந்து விட்டார். கதாநாயகன் ஆகிவிட்டார். ஒத்த மனநிலை கொண்டவர்களுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். எனவே இந்த படப்பிடிப்பு இனிமையாக இருந்தது.

ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாகச் சிறந்த கதைகள் வருவதில்லை. பாசமலர், குடும்பம் ஒரு கதம்பம் போன்ற கதைகள் இப்போது எங்கே வருகின்றன? அப்போது படங்களைப் பார்த்து விட்டு வந்தால் படங்களைப் பற்றி திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பார்கள். படம் நன்றாக இருந்தால் குடும்பத்தோடு வண்டி கட்டிக்கொண்டு தியேட்டருக்குச் சென்ற காலம் அது.

இப்போது அப்படி இல்லை. அனைவரும் பார்க்கும் படி படம் எடுக்கிறார்களா? ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். மற்றவர்கள் படம் பார்க்க வேண்டாமா? திரையரங்குகளில் ஏன் ஆள் வரவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு சாராருக்கு மட்டுமே படம் எடுக்கிறார்கள். அனைவரும் பார்க்கும் படியான வாழ்வியல் கதைகளை வைத்து படமாக எடுக்க வேண்டும். அப்படி இன்று படங்கள் வருவதில்லை” என்று பேசினார் ஆர்.வி.உதயகுமார்.

வாழ்வியல் கதைகள் இன்று படங்களாக வருவதில்லை: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேதனை
சின்மயி மன்னிப்பு கேட்க வேண்டும்: இயக்குநர் பேரரசு காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in