

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள் என பலர் நடித்திருந்த படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையடுத்து அடுத்த படத்துக்கான வேலையில் இருக்கும் இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறும்போது, ‘‘மொத ராத்திரி படம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியைப் பெற்றிருக்கிறது. பட வெளியீட்டுக்குப் பிறகு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தேன். இறங்கும்போது ஆட்டோக்காரர், பணம் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். “இப்படி ஒரு சிறந்த படத்தைக் கொடுத்திருக்கீங்க, திருப்தியா இருக்கு, அடுத்தும் நல்ல படம் கொடுங்க, காசு வேண்டாம்” என்று மறுத்துவிட்டார்.
இதுவே இந்தப் படம் நன்றாக ரீச் ஆகியிருக்கிறது என்பதற்கான அடையாளம்தான். இதில் நான் நடித்திருப்பது பற்றி கேட்கிறார்கள். எனக்கு நடிப்பு ஆசை இருந்தது. இருந்தாலும் நான் நடித்த கேரக்டரில் வேறொரு நடிகரைத்தான் பேசி வைத்திருந்தோம்.
பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களால் அவர் நடிக்க இயலவில்லை. அதனால் நான் நடிக்க வேண்டியதாகிவிட்டது. அடுத்து சில வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அடுத்தும் ஊர்க் கதையைத்தான் எடுக்க இருக்கிறேன். புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். அதற்கான வேலை போய் கொண்டிருக்கிறது” என்றார்.