

நடிகர் தனுஷ், தனது பிறந்த நாளை கடந்த 28-ம் தேதி கொண்டாடினார். அதை முன்னிட்டு அவரது நற்பணி மன்றம் சார்பில், வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை, 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்துக்கு 30 ஆட்டோக்களை தனுஷ் வழங்கினார்.
பின்னர் ரசிகர்களிடையே அவர் பேசும்போது கூறியதாவது: “நம் வாழ்க்கையில நிறைய பிரச்சனை வரும். நிறைய நல்லது கெட்டது வரும். நல்லவங்க யாரு, கெட்டவங்க யாரு, எதிரி யாரு, முதுகுல குத்துறவன் யாருன்னு தெரியாது. நிறைய மன உளைச்சல் வரும். அன்றாட வாழ்க்கையே குழப்பமா இருக்கும். இஎம்ஐ கட்டுறதுல இருந்து ஸ்கூல் பீஸ் கட்டுற வரைக்கும் எவ்வளவோ பிரச்சினைகள். அதை எல்லாம் எப்படி சமாளிக்கிறது ? ஒண்ணு, மனவலிமை, மன திடம். இன்னொன்னு உடல் ஆரோக்கியம்.
உடல் ஆரோக்கியத்துக்கு என்ன பண்ணணும் ? வொர்க் அவுட் பண்ணுங்க, பத்தியமா சாப்பிடுங்க, ஜிம்முக்கு போங்க. போக முடியாதவங்க வாக்கிங் போங்க. சும்மா ஒரு இடத்துல உட்காரவே, உட்காராதீங்க. வீட்ல இருக்குற எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யுங்க, அதுவே பெரிய வொர்க் அவுட் தான். உங்க பசங்களுக்கும் அதையே சொல்லி கொடுங்க. சின்ன வயசுல இருந்தே முயற்சி பண்ணுங்க. வீட்டு சாப்பாடு சாப்பிட வைங்க. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட வைக்காதீங்க.
அதை எல்லாம் விட முக்கியம், குழந்தைங்க கையில மொபைலையோ, ஐபேடையோ கொடுக்காதீங்க. அதை விட மோசமான ஒரு செயல் கிடையாது. அது அவங்க மூளை வளர்ச்சியையே பாதிக்கும். குழந்தைகளை ஓடி ஆடி விளையாட வையுங்க. மன ஆரோக்கியத்துக்கு தியானம் பண்ணுங்க. இதை சாதாரணமா நினைச்சிடாதீங்க. உங்க வாழ்க்கையே மாத்தி, நல்ல வழியில கொண்டும் செல்லும் சக்தி அதுக்கு உண்டு. உங்க சாமி ரூம்ல உட்காருங்க, கண்ணை மூடுங்க. ஒரு குரல் கேட்கும்.
அந்த குரல் என்னென்னவோ பேசும், பேசட்டும், பேச விடுங்க. சில மாதங்கள்ல, அந்த குரல் ஓய்ந்ததுக்கு அப்புறம் அமைதி வரும். அந்த அமைதியில ஒரு குரல் தீர்க்கமா, திவ்யமா, அசரீரி மாதிரிகேட்கும். அந்த குரல் உங்களை அறப்படுத்தும், நெறிப்படுத்தும், ஒழுங்குபடுத்தும். உண்மையான வழியில கொண்டு போகும்.
நல்லவங்க, கெட்டவங்க யாருன்னு உங்களுக்கு காட்டும். உங்க பிரச்சினைகளுக்கான தீர்வு எல்லாம் தானா உங்க மனசுல தோணும். அப்ப புரியும், எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கைன்னு அந்த குரல் சொல்லும். அந்த குரல்தான் கடவுள். இவ்வாறு நடிகர் தனுஷ் கூறினார்.