

விஜய் ஆண்டனி, ப்ரித்தி அஸ்ராணி, பேபி லிதன்யா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம், ‘அப்பா குட்டி’. மு.மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் தங்கர்பச்சான், சசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் தங்கர் பச்சான் பேசும்போது, “தமிழ்நாட்டில் உருவாகும் படங்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால் வாரத்துக்கு வெளியாகும் 10 படங்களில் 2 படங்களுக்குக் கூட தமிழில் பெயர் இருப்பதில்லை. இதுகுறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
மக்களுடைய பணம் மட்டும் வேண்டும் என்று நினைப்பது வருத்தமளிக்கிறது. முன்பு கருணாநிதி ஆட்சியில் தமிழ்ப் பெயர்களை ஊக்குவிப்பதற்காக வரிச்சலுகை வழங்கப்பட்டது. இப்போது இந்த விஷயத்தில் அரசுகள் கவனம் செலுத்துகின்றனவா என்று தெரியவில்லை. இது அவமானமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.
இன்றைய மனித வாழ்க்கை உறவுகளைக் கடந்து பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் நேசிப்பவர்களுடன் 5 நிமிடங்கள் அமர்ந்து பேசக்கூட நேரமில்லாமல் கைபேசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் ‘அப்பா குட்டி’ போன்ற திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம். குறிப்பாக, குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் உலக அளவில் குறைந்து விட்டன. குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியைப் பெற்றோரின் கைபேசிகளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
இவற்றைப் பேசுவதற்கான கலைதான் திரைப்படக் கலை. ஆனால் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் நவீன கேமராக்கள், ஒளி, ஒலி உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பெரும்பாலும் வன்முறையைக் காட்சிப்படுத்தவும், போதைப்பொருள் கடத்தல், மது அருந்துதல் போன்றவற்றை விதவிதமாகக் காட்டவும் பயன்படுத்துகிறோம்.
அப்படிப்பட்ட படங்கள் எத்தனை கோடி வசூல் செய்கின்றன என்று எழுதுகிறோம். அந்தப் பணத்தால் சமூகத்துக்கு என்ன பயன்? மீண்டும் மீண்டும் அதே போன்ற படங்களைத்தான் உருவாக்குகிறார்கள். அதற்குப் பதிலாக, மக்களிடம் உறவுகளையும் அன்பையும் பேசக்கூடிய திரைப்படங்கள் கவனிக்கப்பட வேண்டும். இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.