

தமிழ் திரைத்துறையினருக்காக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ என்ற பெயரில் திரைப்பட விருது விழா, ஜன.25 -ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், இப்போது டூரிங் டாக்கீஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் திரைபிரபலங்களின் நேர்காணல்களை வெளியிட்டு வரும் அவர், அடுத்த கட்டமாக ‘ஃபிரேம் அண்ட் ஃபேம் ’ என்ற பெயரில் திரைப்படத் துறையினருக்கான விருது விழாவை நடத்துகிறார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் சித்ரா லட்சுமணன் கூறியதாவது: நான் டூரிங் டாக்கீஸ் சேனலை ஆரம்பித்தபோது, திரையுலகில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமல்லாமல் தோல்வியடைந்தவர்களின் நேர்காணலையும் வெளியிட்டேன்.
கலைஞர்களின் பேட்டி, கருத்துகளைப் பதிவு செய்வது என்பதைத் தாண்டி, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதன் வெளிப்பாடுதான் இந்த விருது விழா.
கலைஞர்கள், கோடி கோடியாக சம்பாதித்தாலும் கைதட்டலும் விழா மேடைகளும் அவர்களுக்குப் பெற்றுத் தருகிற சந்தோஷத்தை கரன்சி நோட்டுகள் தராது என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட சந்தோஷத்தை தருவதுதான் இவ்விழாவின் நோக்கம்.
விருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் குழுவின் தலைவராக கே.பாக்யராஜ் இருக்கிறார். அவருடன் இளவரசு, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குஷ்பு உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்த விருது விழா ஜனவரி 25ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடை பெற இருக்கிறது. இந்தாண்டு வெளியான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் உள்பட 50 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இதில் வெப் தொடர்களை சேர்க்கவில்லை. இவ்வாறு சித்ரா லட்சுமணன் கூறினார். கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், டி.சிவா உடனிருந்தனர்.