

‘சீன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்காக மலையாள நடிகர் டோவினோ தாமஸுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘சீன்’. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையில் ‘சீன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு நன்றி தெரிவித்து சூர்யா பதிவிட்டுள்ளார்.
தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அந்தப் பதிவில், ‘பிரியத்துக்குரிய டோவினோ தாமஸ், எங்களின் விக்டராக இருப்பதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது. எங்களுடன் இணைந்த உங்களின் அன்பும் பெருந்தன்மையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மிகவும் முக்கியமானது.
என்னுடன் இணைந்து நடித்த மலையாள சினிமா உலகின் அற்புதமான சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அனைவருக்கும் ‘சீன்’ படத்தில் இணைந்ததற்காக மிக்க நன்றி. இது மலையாள சினிமாவுக்கான எங்களின் அன்பின் கடிதம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் டிஜிபி இன்பராஜ் விக்டரை சிறையில் சந்திக்கும் ஒரு வீடியோ க்ளிப்பையும் சூர்யா இணைத்துள்ளார்.
‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன்தான் ‘சீன்’ படத்தையும் இயக்கி இருக்கிறார். அப்படத்தின் வில்லன் நஸ்லென், மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு கலைஞர். இவர்கள் தவிர படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்ப கலைஞர்கள் மலையாள திரையுலகில் பணியாற்றியவர்களே.
ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் தயாரித்துள்ள ‘சீன்’ படத்துக்கு வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவும், அஜ்மல் சாபு படத் தொகுப்பும் செய்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சூர்யாவுடன் பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான 3-வது படம் இது. ஆக்ஷன் காமெடி த்ரில்லராக இருக்கும் இப்படம் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.