சண்டைப் பயிற்சியாளர்: சாகசத்தின் காட்சிமொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 50

சண்டைப் பயிற்சியாளர்: சாகசத்தின் காட்சிமொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 50
Updated on
3 min read

திரைப்​படங்​களில் அதிரடிச் சண்டைக் காட்சிகள் (Action Sequences) பார்​வை​யாளர்​களை இருக்​கை​யின் நுனிக்கே கொண்டு செல்​லும். ஒரு சண்​டைப் பயிற்​சி​யாளர் ஆபத்​தான செயல்​களை பாது​காப்​புடன், அழகியலுடன், கதை​யின் தேவைக்​கேற்ப வடிவ​மைக்​கும் படைப்​பாளி.

சண்​டைக் காட்​சி​யின் வடிவ​மைப்பு திரைக்​கதையை வாசிப்​ப​திலிருந்தே தொடங்​கு​கிறது. கதா​பாத்​திரத்​தின் வயது, உடல் திறன், உணர்ச்​சி, சமூகப் பின்​னணி, பயன்​படுத்​தப்​படும் ஆயுதங்​கள், காட்​சி​யின் இடம், காலநிலை போன்ற அனைத்​தை​யும் ஆராய்ந்து சண்​டை​யின் பாணி​யைத் தீர்​மானிக்​கிறார் ஸ்டன்ட் கொரியோகி​ராஃபர்.

ஒரு காவல்​துறை அதி​காரி​யின் சண்​டை​யும் குத்​துச்​சண்டை வீரரின் சண்​டை​யும் கிராமத்து இளைஞரின் சண்​டை​யும் ஒரே மாதிரி​யாக இருக்க முடி​யாது. ஒவ்​வொரு கதா​பாத்​திரத்​துக்​கும் தனித்​து​வ​மான உடல் மொழியை உரு​வாக்​கு​வதே சிறந்த சண்​டைப் பயிற்​சி​யாளரின் அடை​யாளம்.

சண்​டைக் காட்சி வெற்​றிகர​மாக அமைய, சண்​டைப் பயிற்​சி​யாளரின் உடல்​சார் வலிமை மட்​டும் போதாது; அதை வேகத்​தோடும் வீரி​யத்​தோடும் திரை​யில் கடத்​தும் ஒளிப்​பதிவாளரின் காட்சி மொழி​யும் மிக அவசி​யம். சண்​டைப் பயிற்​சி​யாளர் ஆபத்​தையும் அசைவுகளை​யும் தீர்​மானிக்​கிறார்; ஒளிப்​ப​தி​வாளர் அந்த அசைவு​களுக்கு வேகம், அழுத்​தம், மற்​றும் காட்சி அழகியலை வழங்​கு​கிறார்.

அதிரடிக் காட்​சிகளின் வகைகள்

இவ்​வகைக் காட்​சிகள் கதை​யின் தேவைக்​கேற்ப பல்​வேறு வகைகளாகப் பிரிக்​கப்​படு​கின்​றன:

துரத்​தல் காட்​சிகள்: வாக​னத் துரத்​தல் (கார்​/பைக்) மற்​றும் கால்​நடைத் துரத்​தல் (Foot Chase) என இரு​வகைப்​படும். வாக​னத் துரத்​தலுக்கு எஃப்​பிவி ட்ரோன்​கள் மற்​றும் காரின் சக்​கரங்களுக்கு அருகே பொருத்​தப்​படும் கேம​ராக்​கள் பயன்​படு​கின்​றன. நெரிசலான இடங்​களில் நடக்​கும் கால்​நடைத் துரத்​தலுக்கு ஸ்டெடிகேம் மற்​றும் ஹேண்ட்​ஹெல்ட் கேம​ராக்​கள் முதன்​மை​யாகப் பயன்​படு​கின்​றன.

சண்​டைகளின் பல்​வேறு வடிவங்​கள்: மிக நெருக்​க​மான இடைவெளி​யில் நடக்​கும் கைகலப்பு சண்​டை, வாள் மற்​றும் கத்திகளைப் பயன்​படுத்​தும் ஆயுதச் சண்​டை, உடலசைவு​கள் நிறைந்த தற்​காப்​புக் கலைச் சண்​டை, மற்​றும் நூற்​றுக்​ கணக்​கானோர் மோதிக்​கொள்​ளும் பிரம்​மாண்​டக் குழுச் சண்டை என சண்​டைகள் பலவகைப்​படும்.

உடல்​சார் போராட்​டக் காட்​சிகள் (Struggle Sequences): இங்கு முறை​யான சண்டை அசைவு​கள் இருக்​காது. ஒரு​வர் மற்​றவரைத் தண்​ணீரில் மூழ்​கடிப்​பது அல்​லது கழுத்தை நெரிப்​பது போன்ற உயிருக்​குப் போராடும் தற்​காப்​புப் போராட்​டம் மட்​டுமே இருக்கும். இதில் எக்​ஸ்ட்​ரீம் குளோஸ்​-அப் ஷாட்​கள் மூலம் கதா​பாத்​திரத்​தின் பயத்​தை​யும் வலியை​யும் ஒளிப்​ப​தி​வாளர் வெளிப்படுத்​து​வார்.

சண்டை இல்​லாத ஆபத்​தான காட்​சிகள் மற்​றும் ஸ்டண்ட் மாஸ்டர்

திரைப்​படத்​தில் அடிதடி சண்​டைகள் இல்​லா​விட்​டாலும், ஆபத்தான வாகன ஓட்​டு​தல் இருந்​தால் சண்​டைப் பயிற்​சி​யாளரின் வழி​காட்​டு​தல் நிச்​ச​யம் தேவைப்​படும். காரை அதிவேக​மாகத் திருப்​புவது அல்​லது தலைகீழாகக் கவிழ்ப்​பது போன்ற ஆபத்​தான காட்​சிகளைத் தொழில்​முறை ஸ்டன்ட் டிரைவர்​களைக் கொண்டு சண்​டைப் பயிற்​சி​யாளர் இயக்​கு​வார். கேமரா ஆபரேட்​டர் மீது கார் மோதி​வி​டாத​வாறு தடுப்​பு​களை அமைப்​பதும், பாது​காப்​பான தொலைவை ஒளிப்​பதிவாள​ருடன் இணைந்து கணக்​கிடுவதும் இவரது பொறுப்​பாகும்.

ஸ்டன்ட் டபுள் மற்​றும் ஒளிப்​ப​திவு நுட்​பங்​கள் (Body Doubles)

ஆபத்​தான ஸ்டன்​டு​களில் முதன்மை நடிகருக்​குப் பதிலாக ஸ்டன்ட் டபுள் கலைஞர் பயன்​படுத்​தப்​படும்​போது, அதை பார்​வை​யாளர்​கள் கண்​டு​பிடிக்க முடி​யாத​வாறு மறைப்​பது ஒளிப்​ப​தி​வாளரின் திறமை​யாகும்:

கோணங்​களும் ஃபிரேமிங்​கும்: ஸ்டண்ட் டபுள் நடிக்​கும்​போது கேமரா எப்​போதும் பின்​புறத்திலோ அல்​லது பக்​க​வாட்​டிலோ நிறுத்​தப்​படும். அந்​தக் கலைஞர் காற்​றில் பறந்து தரையிறங்​கும் இறுதி விநாடி​யில் கேம​ராவை லேசாக நகர்த்​தி, நடிகரின் முகத்தில் ஷாட்டை முடிப்​பார்​கள்.

ஒளியமைப்​பு: வலு​வான பின்​புற ஒளியை வழங்​கி, கலைஞரின் உடலை நிழல் வடிவ​மாக மாற்​று​வதன் மூல​மும் இருளைப் பயன்​படுத்​து​வதன் மூல​மும் ஸ்டன்ட் டபுள் கலைஞரின் முகத்தை மறைப்​பார்​கள்.

தொடர்ச்​சி: ஸ்டன்ட் டபுள் ஷாட்டை எடுத்த பிறகு, அதே லென்ஸ் குவியலில் நடிகரின் முக பாவங்​களைத் தனி​யாகப் படம்​பிடித்து எடிட்​டிங்​கில் இணைப்​பார்​கள்.

பல கேமரா அமைப்பு

கட்​டிடம் உடைவது, வாக​னம் கவிழ்​வது போன்ற ஆபத்​தான காட்​சிகளை மீண்​டும் மீண்​டும் படமாக்க முடி​யாது. அதனால் பல கேம​ராக்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன:

A-கேமரா (Master Shot): சண்​டை​யின் முதன்மை அசைவு​களை​யும், கதா​நாயக​னின் முகத்​தை​யும் படம்​பிடிக்​கும்.

B-கேமரா (Impact Shot): அடி விழும் தருணம் அல்​லது எதிர்​வினையை நெருக்​க​மாகக் காட்​டும்.

C-கேமரா (Extreme Angles): மேல் கோணத்​திலோ அல்​லது அதிவேக ஃபிரேம் ரேட்​டிலோ காட்​சிகளைப் பதிவு செய்​யும்.

ஒரு கேம​ரா​வின் பார்​வை​யில் மற்​றொரு கேமரா தெரி​யாத​வாறு கோணங்​கள் துல்​லிய​மாகத் திட்​ட​மிடப்​படும்.

ஃபிரேம் ரேட் நுட்​பங்​கள்

22fps (Under-Cranking): சாதாரண 24 fps-க்கு பதிலாகக் கேம​ராவை 22fps வேகத்​தில் இயக்​கும்​போது, கலைஞர்​களின் மெது​வான அசை​வும் திரை​யில் மின்​னல் வேகத் தாக்​குதலாகத் தோன்​றும். நடிகர்​கள் பலமாக அடிக்​காமல் பாது​காப்​பாகச் சண்டை செய்ய இது உதவு​கிறது.

அதிவேக ஃபிரேம் ரேட்​கள்: அடி​யின் கொடூர​மான தாக்​கத்​தைக் காட்​ட​வும், நடிகர் காற்​றில் பறந்து வரு​வதைப் பிரம்​மாண்​டப்​படுத்​த​வும் 48fps, 120fps, 250fps ஃபிரேம் ரேட்​கள் பயன்​படு​கின்​றன. ரத்​தத் துளி​கள், கண்​ணாடிகள் நொறுங்​கு​வது போன்​றவை ஸ்லோ - மோஷனில் காட்​டப்​படும்​போது காட்​சி​யின் உணர்ச்சி கூடு​கிறது.

தொடர் அசைவு​களும் பாது​காப்பு மெத்​தைகளும்

சண்டை என்​பது ஒரு தொடர்ச்​சி​யான இயக்​கம். தாக்​குபவர் மற்​றும் அடி வாங்​கு பவரின் திசைகள் குழப்​பமடை​யாமல் இருக்க 180-டிகிரி விதி கடைப்​பிடிக்​கப்​படும்.

உயரத்​திலிருந்து குதிக்​கும் காட்​சிகளில் பாது​காப்பு மெத்​தைகள் பயன்​படுத்​தப்​படும். அந்த மெத்​தைகளைத் திரை​யில் மறைக்க:

லோ ஆங்​கிள்​/ஃ​போர் க்ர​வுண்ட் மாஸ்​கிங்: கேம​ராவைக் கீழே வைத்​து, முன்​னணி​யில் உள்ள பொருள்​களைக் கொண்டு மெத்​தையை மறைப்​பார்​கள்.

டைட் ஃபிரேமிங்: கலைஞர் குதிக்​கும் தருணத்தை மட்​டும் காட்​டி, மெத்​தை​யில் தரை​யிறங்​கு​வதற்கு முன் கட் செய்​வார்​கள்.

டச் ஆங்​கிள்: கேம​ராவைச் சற்றே சாய்த்து வைப்​ப​தன் மூலம் கீழே உள்ள பாது​காப்பு உபகரணங்​கள் ஃபிரே​முக்​குள் வராமல் தடுக்​கப்​படும்.

சவாலான சூழல்​கள்: மழை​யும் தீயும்

மழை​யில் சண்​டை: இதில் தரை வழுக்​கும் ஆபத்து உள்​ளது. லென்​ஸில் நீர் படா​மல் இருக்க ‘ரெய்ன் ஸ்பின்​னர்​கள்’ பயன்​படுத்​தப்​படும். பேக்​-லைட் கொடுத்​தால் மட்​டுமே மழைத்துளி​கள் திரை​யில் தெளி​வாகத் தெரி​யும்.

தீக் காட்​சிகள்: உடம்​பில் தீப்​பிடிக்​கும் காட்​சி களில் பாது​காப்பு அதி​காரி அரு​கிலேயே இருப்​பார். ஒளிப்​ப​தி​வாளர் டெலிஃ​போட்டோ லென்​ஸ்​களைப் பயன்​படுத்​தித் தூரத்​திலிருந்து படமாக்​கு​வார். இது கலைஞர்​களுக்​குப் பாது​காப்​பைத் தரு​வதுடன், தீ ஜூவாலை நடிகருக்கு மிக அரு​கில் இருப்பது போலவும் காட்​டும்.

ஒரு சண்​டைக் காட்சி வன்​முறை​யாக அல்​லாமல் அழகிய​லாக மாறு​வது சண்​டைப் பயிற்சியாளரின் உடலியக்​கத் திட்​ட​மிடலிலும், ஒளிப்​ப​தி​வாளரின் காட்சி நுட்​பத்​தி​லும்​தான் உள்​ளது.

ஆபத்தை மறைத்​து, வேகத்​தைக் கூட்​டி, கலைஞர்​களின் பாது​காப்பை உறு​தி​செய்​து, நவீன கேம​ராக் கருவி​களின் துணை​யோடு உரு​வாக்​கப்​படும்​போதே அதிரடிக் காட்​சிகள் சினி​மா​வின் உச்​சகட்ட அனுபவ​மாக உயிர்​பெறுகின்​றன.

சண்​டைக் காட்​சிகள் வெற்​றியடைவது என்​பது உடற்​தகு​தி, குழு ஒருங்​கிணைப்​பு, தொழில் நுட்ப அறிவு ஆகியவை ஒன்​றிணை​யும் போது மட்​டுமே சாத்​தி​ய​மாகிறது. ஒரு சிறந்த சண்​டைப் பயிற்சியாளரின்​ வெற்​றி, பார்​வை​யாளர்​களின்​ கைதட்​டலில்​ மட்டுமல்​ல; படப்​பிடிப்​பு முடி​வில்​ அனை​வரும்​ பாது​காப்​பாக வீடு திரும்புவதிலுமே இருக்​கிறது.

சி.ஜெ.ராஜ்குமார்

(திரைப்பட ஒளிப்பதிவாளர்)

cjrdop@gmail.com

(புதன்​தோறும் ஒளி​காட்​டுவோம்​)

சண்டைப் பயிற்சியாளர்: சாகசத்தின் காட்சிமொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 50
நடன இயக்​குநர் – அசை​வின் அழகியல் | ஒளி என்பது வெளிச்சமல்ல 49

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in