

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட்பிரபு இருவரும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக அமெரிக்காவுக்கு பயணித்திருக்கிறார்கள்.
‘பராசக்தி’ படத்துக்கு பிறகு சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட்பிரபு ஆகியோரது இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதில் எந்தப் படம் முதல் தொடங்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது வெங்கட்பிரபு படத்துக்காக அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அமெரிக்காவில் உள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு தான் இருவரும் சென்றிருக்கிறார்கள். உடல் முழுக்க ஸ்கேன் செய்வது மற்றும் முகத்தை ஸ்கேன் செய்வது என அந்நிறுவனம் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலம். இதனை வைத்து ஒரே கதாபாத்திரத்தினை பல்வேறு கதாபாத்திர வடிவமைப்புகளாக மாற்றலாம். இந்த தொழில்நுட்பத்தினை வைத்து ‘கோட்’ படத்தினை உருவாக்கினார் இயக்குநர் வெங்கட்பிரபு.
அதே தொழில்நுட்பத்தினை முன்வைத்தே சிவகார்த்திகேயன் படத்தினையும் உருவாக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இப்படமும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப ரீதியில் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். சயின்ஸ் பிக்சன் மற்றும் டைம் டிராவல் பாணியிலான கதையொன்றை தான் சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார் வெங்கட்பிரபு. இந்தக் கூட்டணி படத்தினை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.