

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்பட பலர் நடித்து 2023-ல் வெளியான திரைப்படம், ‘பார்க்கிங்’. இப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றது. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கருக்கு பெற்று தந்தது. இப்படத்தை அடுத்து, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார்.
சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படமான இதை, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இதுபற்றி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, இன்று தொடங்கும் ஒரு கனவு. சிவகார்த்திகேயனுடன் எனது புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது பெரும் பாக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.