

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ், உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. பாடகர் கிருஷ்ணராஜ் ஆரம்ப காலகட்டங்களில் ‘டிராக்’ பாடினார்.
அதன்பின்னர் பிரபலப் பாடகராக உயர்ந்தார். குறிப்பாக, ‘நினைவிருக்கும் வரை’ படத்தில் ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘பார்வை ஒன்றே போதுமே’ படத்தில் ‘நீ பார்த்துட்டு போனாலும் பாக்காம போனாலும்...’, ‘பொற்காலம்’ படத்தில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’, ‘கழுகு’ படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்’ உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இசை அமைப்பாளர் தேவாவின் இசையில் அதிகமான பாடல்களைப் பாடியுள்ள இவர், கடைசியாக ‘சூரரைப் போற்று’ படத்தில் ‘நாலு நிமிஷம்’ என்ற பாடலைப் பாடியிருந்தார்.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ‘கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்பது உள்பட பல ஆன்மிகப் பாடல்களையும் பாடியுள்ளார்.
‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார். சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவின்போது, இறுதிச்சடங்கில் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல் அவரது விருப்பத்தின்படி ஒலிபரப்பு செய்யப்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவந்த கிருஷ்ணராஜ், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலை காலமானார்.
அவர் உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரான சேலம் அருகே உள்ள வேம்படி தாளத்தில் நடைபெறுகிறது.
மறைந்த கிருஷ்ணராஜின் மனைவி மோகனம்பாள் ஏற்கெனவே காலமாகிவிட்டார். அவருக்கு ஜீவரேகா, கீதப்பிரியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.