

‘டிசி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் லோகேஷ் கனகராஜின் நடிப்பை மூத்த இயக்குநர்களான சேரனும், வசந்த பாலனும் பாராட்டியுள்ளனர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகன நடித்திருக்கும் படம் ‘டிசி’. இந்தப் படத்தில், கதாநாயகன் லோகேஷ் கனகராஜின் நடிப்பு தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
லோகேஷின் நடிப்பை பாராட்டி இயக்குநர் சேரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘நேற்று மாலை ‘டிசி’ படம் பார்த்தேன். இல்லை பார்த்தோம். இயக்குநர்கள் படையுடன். தம்பி லோகேஷ் கனகராஜ் அறிமுகத்துக்கு ஏற்ற படம். மிகையில்லாமல் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருந்தி இருக்கிறார். வாழ்த்துகள் தம்பி.
படமாகவே ஒரு நவீன யுக்தியில் கதையும் நடிக்கும் கதாபாத்திரங்களும் இசையும் பெரும் அடைமழையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் பெரிய ஆற்றில் நீந்திய அனுபவத்தை கொடுத்தது.
இந்த முயற்சி எடுத்த தம்பி இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு மொத்த குழுவிற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். திரையரங்கில் ரசிகர்களால் கொண்டாடப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மற்றொரு இயக்குநரான வசந்த பாலனும் லோகேஷின் நடிப்பை பாராட்டி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘இயக்குநர் லோகேஷ் நடிகராக தன் முதல் படத்திலேயே பிரமாதமான ஆக்ஷன் கதாநாயகனாக மிளிர்கிறார்.
படத்தின் இன்னொரு நாயகன் அனிருத். ஒரு ஆக்ஷன் வயலன்ஸ் திரைப்படத்தை தன் ஆகச் சிறந்த இசையால் அழகுப்படுத்தி ஆர்ப்பரித்து கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார். வாழ்த்துகள் லோகேஷ் கனகராஜ்’ என்று தெரிவித்துள்ளார்.
நாயகனாக லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகி இருக்கும் ’டிசி’ படத்தில் அவருடன் வாமிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முகேஷ் ஒளிப்பதிவில், அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.