“தமிழகத்தில் உள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” என்று இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கொம்பு சீவி'. இதில் சரத்குமார், சண்முக பாண்டியன், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வரும் 19-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், “கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது.
இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் - ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.
இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள். உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத் துறையிலும் உண்டு. சமூகம், அரசியல், திரைத்துறை என எல்லாத் துறையிலும் இது உண்டு.
எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யு. சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி - கமல், அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும்” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.