

ரியோ ராஜ் அடுத்து நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் IN லீலா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
’ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்குப் பிறகு ரியோ ராஜின் அடுத்த படம் என்ன என்று பலரும் எதிர்நோக்கி இருந்தார்கள். ஏனென்றால் அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரியோ ராஜின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
‘ராம் IN லீலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கவுள்ளது. இதில் வர்திகா ஜெயின், நாயகியாக நடிக்கவுள்ளார். ”இது வழக்கமான காதல் கதை அல்ல, எனது ராம் இன் லீலா மக்களே” என்று ரியோ ராஜ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தினை ராமசந்திரன் கண்ணன் இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக மல்லிகா அர்ஜுன், இசையமைப்பாளராக அன்கிட் மேனன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். மேலும், ‘ஆண்பாவம் பொல்லாதது’ நிகழ்ச்சியின் போது ‘ரியோ ராஜ்’ என்ற பெயருக்கு பதிலாக ‘ரியோ’ என்று வைத்துக் கொள்ளுங்கள் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு ‘ராம் IN லீலா’ படத்தின் போஸ்டரில் தனது பெயரை ரியோ என்று மட்டுமே போட்டுள்ளார்.