

விஜய் - சூர்யா இணைந்து நடித்து 2001-ம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ப்ரண்ட்ஸ்’. சித்திக் இயக்கிய இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இதில் வடிவேலு, சார்லி, ரமேஷ் கண்ணா வரும் காமெடி காட்சிகள் இப்போதும் பிரபலம். இப்படம் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 4 கே தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு நவ.21-ல் வெளியாகிறது.
ஜாக்குவார் ஸ்டூடியோஸ் சார்பில் பி.வினோத் ஜெயின் வெளியிடுகிறார். இப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கவுதம் ராஜ், பொன் குமரன், ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் ரமேஷ் கண்ணா பேசும்போது, "இந்தப் படத்தின் இயக்குநர் சித்திக், அவர் எழுதிய வசனங்களைத் தவிர வேறு எந்த வசனங்களையும் பேச அனுமதிக்க மாட்டார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆணியே புடுங்க வேணாம்’ எனும் வசனத்தைக் கோகுல கிருஷ்ணாவும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதினார்கள்.
சித்திக், சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அது போன்ற இயக்குநர் தற்போது இல்லாதது நமக்கு பெரிய இழப்புதான். ‘நேசமணி’ அவர் உருவாக்கிய அற்புதமான கதாபாத்திரம்.
இந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இந்தப் படத்தில் இடம் பெறும் கடிகாரம் உடையும் காட்சியைப் படமாக்கும் போது விஜய்யும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள்.
மீண்டும் அந்த காட்சியைப் படமாக்குவதற்கு அரை மணி நேரத்துக்கும் மேலானது. இந்தப் படத்தில் தேவயானி கதாபாத்திரத்துக்காக முதலில் ஜோதிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிறகு சிம்ரனிடம் பேசினார்கள். இறுதியில் தேவயானி நடித்தார்” என்றார்.