

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் துறைகளைச் சேர்ந்த தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்தியத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. இதை இச்சங்கத்தின் கவுரவத் தலைவர் ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்.
அவர் பேசும்போது, “தயாரிப்பாளர்கள் கைகட்டி நிற்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அந்த நிலை மாறவேண்டும். எல்லோருக்கும் கவுரவம் அளித்து செயல்படுவதற்கான முயற்சிதான் இந்த அமைப்பு. படங்கள் வெற்றியடைந்தால் மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் வாங்குகிறார்கள். இல்லையென்றால் பங்கீடு அடிப்படையில் வாங்குகிறார்கள். இதுபோன்ற நிலையில் அரசு சார்பில் புதிய ஓ.டி.டி. தொடங்கப்படும் என்பது சிறந்த முயற்சியாக இருக்கும்” என்றார்.