

‘தென்னிந்திய திரையுலகம் அதன் உறுதியான தூண்களில் ஒன்றை இழந்து விட்டது’ என பிரசாத் லேப்ஸ் தொழில்நுட்ப தலைவர் சிவராமன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், ஏவிட் (Avid), டிஜிட்டல் சினிமா என காலம்தோறும் பல்வேறு மாற்றங்களின் ஊடாக சினிமா வளர்ந்து வந்துள்ளது. இந்த மாற்றங்களில் எல்லாம் முக்கிய பங்கு வகித்த, பிரசாத் லேப்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவர் எஸ்.சிவராமன் காலமானார்.
ப்ராசஸிங், கலர் கரெக்ஷன் மற்றும் சவுண்ட் தொழில்நுட்பத்தில் அவர் முக்கியமான பங்காற்றியுள்ளார். இந்தியாவில் சினிமா தொடர்பான பல தொழில்நுட்பங்கள் நடைமுறையில் சாத்தியமானதுக்கு அவரே காரணம்.
பிலிம் ரீல்களில் இருந்து டிஜிட்டலுக்கு திரைப்படங்கள் மாறியபோது அதற்கு தேவையான பயிற்சிகளை சக கலைஞர்களுக்கு அவர் வழங்கினார். பல முன்னணி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அவர் ஒரு தொழில்நுட்ப வழிகாட்டியாக விளங்கியுள்ளார்.
இந்த வகையில் தன் வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் அவர் குறைந்தது 500 படங்களையாவது, ஒலி இல்லாமல் பார்த்திருக்க வேண்டும். இது சாதாரணமான விஷயம் இல்லை.
தென்னிந்திய திரையுலகம் அதன் தூண்களில் ஒன்றை இழந்து விட்டது. சாதாரண தூணை இல்லை. கற்பாறை போன்ற உறுதியான தூண் அது. மிகப் பெரிய இழப்பையும் அதனால் ஏற்படும் வெறுமையையும் நான் உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.