

‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமையை பெரும் விலைக்கு ஜீ 5 நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ’பராசக்தி’. இதன் ஓடிடி உரிமம் விற்கப்படாமல் இருந்தது. இப்படத்தின் உரிமையினை ஓடிடி நிறுவனங்கள் வாங்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகின. ஏனென்றால், இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் நடந்த கதை எனவும் கூறப்பட்டது.
இதனிடையே, ஜீ5 நிறுவனம் ‘பராசக்தி’ படத்தின் ஓடிடி உரிமையினை கைப்பற்றி இருக்கிறது. இந்த உரிமையினை ரூ.52 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையான ஓடிடி உரிமம் என்றால் ‘பராசக்தி’ தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவி கைப்பற்றி இருக்கிறது.
இதன் மூலம் அனைத்து உரிமைகளும் விற்பனையாகிவிட்டதால், ஜனவரி 14-ம் தேதி ‘பராசக்தி’ படத்தை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்துள்ளார்.