

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம், உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், மொழிப் போராட்டப் பின்னணியில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் ஓரிரு நாட்கள் தடுமாறினாலும் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலை பெற்றது.
முதல் நாளில் உலகளவில் ரூ.27 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம், 11-வது நாளான இன்று இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளது. "உலகம் முழுவதும் பராசக்தியின் கர்ஜனை ஒலிக்கிறது" என்ற வாசகத்துடன் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் இந்த வசூல் சாதனையைப் போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் 25வது படமான இது, ஜி.வி.பிரகாஷின் 100-வது படமும் ஆகும்.