

“நான் ‘டோரதி’ படம் பார்த்தேன். இந்த ஆண்டில் உலகில் யாருமே எடுக்காத உன்னதமான படம் இது. இந்திய திரைப்பட வரலாற்றில் சிறந்த 10 படங்களில் ஒன்றாக ‘டோரதி’ இருக்கும்” என இயக்குநர் மிஷ்கின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இளையராஜாவின் இசையில், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘டோரதி’. இந்தப் படத்தை நெகிழ்ந்து பாராட்டி இயக்குநர் மிஷ்கின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘வணக்கம், என் பிறந்த நாளில் மகளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நான் கனடா வந்திருக்கிறேன். இப்போதுதான் டோரதி பார்த்துவிட்டு வருகிறேன்.
நண்பர்களே... ஆண்களாகிய நாம் இந்த சமூகத்தில் பெண்களுக்கும் பெண்களாக மாறிய திருநங்கைகளுக்கும் எவ்வளவு கொடுமை செய்திருக்கிறோம் என யோசித்துப் பாருங்கள். திருநங்கை ஒருவரை நாம் இரவில் பார்க்கும்போது நாம் அவர்களை அசிங்கமாகவும், விலங்கை விட கேவலமாகவும்தான் பார்க்கிறோம். நான் அவர்களுடன் நிறைய பழகி இருக்கிறேன். என்னுடைய போன படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இப்படம் தொடர்பான புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தபோது கார்த்திக் சுப்புராஜின் படம் ஒன்றைப் பார்த்தேன். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய் போல் அவர் முகம் அதில் கனிந்திருந்தது.
அவர் நிறையப் படங்கள் எடுத்திருக்கிறார். இன்னும் நிறையப் படங்கள் எடுக்கப் போகிறார். ஆனால் இந்தப் படம் மிக மிக சிறந்தப் படம். திரையரங்கில் சென்று ஒரு படத்தை நீங்கள் படமாகத்தான் பார்க்க வேண்டும். அது சொல்லும் உன்னதமான கருத்துகளை நம் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு படம் சிலசமயம் நம்மை பாதிக்கக் கூடிய கருத்துகளைச் சொல்லலாம். அது எப்படிபட்ட பாதிப்பு என்றால், அது ஆண்களைப் பாதிக்கக் கூடியதாக இருக்கும். அப்படியான விஷயங்களை நாம் தர்மத்துடனும் நியாயத்துடனும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இந்தப் படம் மிக உண்மையானப் படம் இல்லையா? இந்திய திரைப்பட வரலாற்றில் 10 சிறந்த படங்களில் இந்தப் படமும் ஒரு படமாக இருக்கும்.
நான் கால்களைத் தொட்டு முத்தமிட்ட மனிதர்களில் இளையராஜா ஒருவர். என் தாயைக் கூட நான் கால்களைத் தொட்டு முத்தமிட்டதில்லை. இளையராஜாவுக்கு பிறகு நான் கார்த்திக் சுப்புராஜின் காலைத் தொட்டு முத்தமிடுவேன். அந்த அளவுக்கு படம் என் மனதைத் தொட்டிருக்கிறது.
இந்த உலகினை அழிக்கப் போகும் எல்லா விஷயங்களையும் ஆண்கள்தான் கண்டுபிடித்திருக்கிறான். ஆனால் ஆண்களால் மிதிக்கப்படும் அலங்கோலப்படுத்தப்படும் இந்தப் பெண்கள் மிகவும் அமைதியாக ஆண்களுக்கு உதவி செய்துகொண்டே இருக்கிறாள்.
இது ஒரு மரபு மீறல் என நீங்கள் சொன்னால் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். உலக வரலாற்றை, தமிழ் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். எல்லா காலக்கட்டத்திலும் தன்னுடைய முழு பெண்மையை உணர்ந்த ஆண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.
இவ்வளவு காலமும் நாம் அவர்களை சாதி, மதம், ஆண் என்ற பெயர்களில் மறைத்துக் கொண்டே இருந்தோம். ஆனால், அந்த எரிமலைகளை நம்மால் மறைக்கவோ, அடக்கவோ முடியாது. இது மிக மிக முக்கியமானப் படம், மேன்மையான படம். குடும்பத்தில் இருக்கக் கூடிய அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
என் படத்தில் ஒவ்வொரு ஷாட்டையும் நான் கஷ்டப்பட்டு எடுப்பேன். என்னை விட 100 மடங்கு கஷ்டப்பட்டு கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை. இந்த மிகச் சிறந்த கலைப் படைப்பை நாம் கொண்டாட வேண்டாமா?
அந்த இரண்டு குழந்தைகளும் எவ்வளவு நன்றாக நடித்திருக்கிறார்கள்.
தமிழர்களைப் போல பெரிய மனது யாருக்கும் இல்லை. நான் படம் பார்த்துவிட்டு வரும்போது இங்கிருந்த தமிழர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.
நான் எடுத்த எல்லா படங்களையும் விட இந்தப் படம் சிறந்த படம். இந்தப் படத்தில் இருந்த நியாயம் என் மனதை அகலமாக்கி உள்ளது. இந்த வருடத்தில் வந்த உலகில் யாருமே எடுக்காத மிகச் சிறந்த படமாக இப்படத்தை நான் கருதுகிறேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து இதை நான் சொல்கிறேன்.
நண்பர்களே, நான் எடுத்த இரண்டு படங்களும் ஆறு வருடங்களாக இன்னும் வெளியாகவில்லை. இனி நாம் படம் எடுப்பதை விட்டுவிடலாம் என நினைத்திந்தேன். இந்தப் படத்தை பார்த்த பின்பு மீண்டும் படம் எடுக்க வேண்டும் என்கிற தைரியத்தையும் உத்வேகத்தையும் இந்தப் படம் எனக்கு கொடுத்துள்ளது.
இது மிகச் சிறந்த படம் அவர் (கார்த்திக் சுப்புராஜ்) மிகச் சிறந்த கலைஞன். அவரை நாம் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகள் நான் சினிமாவில் இருந்தும் இன்னும் நான் அதைக் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் 12 வருடங்களில் அந்தக் குழந்தை ஓர் உன்னதமான படைப்பை கொடுத்திருக்கிறது. அதை நாம் கொண்டாட வேண்டும்.
இந்தப் படத்தை நான் மீண்டும் மீண்டும் பார்ப்பேன். அடுத்தவர்களையும் நான் பார்க்கச் சொல்வேன். இதை என் கடமையாக நினைக்கிறேன். இந்தப் படத்தை நல்ல படம் எனச் சொல்லாவிட்டால் நான் சினிமாவில் இருப்பதில் அர்த்தமில்லை’’ என்று உணர்வுப்பூர்வமாக மிஷ்கின் பேசியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடிப்பில் உருவான ‘டோரதி’ படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றதும் கவனிக்கத்தக்கது.