

வி.ஜே.பப்பு, அனுபமா, நாயகன், நாயகியாக நடித்துள்ள திரைப்படம், ‘மை டியர் டாலி’. ராஜவேலு உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை சிம்மமூர்த்தி சினிமாஸ் ஆர்.எம்.ஜெயராம சந்திரன் தயாரித்துள்ளார். பாசில் இசை அமைத்துள்ளார். பாலாஜி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை இயக்கியுள்ள ஏ.அரவிந்த் ராஜ் கூறும்போது, ” ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நாயகனும் நாயகியும் சில காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களுக்கு மாறி செல்கின்றனர்.
கதாநாயகி மீது நாயகனுக்கு ‘கிரஷ்’ இருக்கிறது. நாயகனுக்குப் பெண்பார்க்கும் சூழ்நிலை உருவாகிறது. குடும்பத்துடன் பார்க்கச் செல்கிறார். தனது அலுவலகத்தில் வேலை பார்த்த பெண்ணே, மணப்பெண்ணாக வருகிறார். மனம் மகிழ்ச்சி அடைகிறது. ஆனால், அதில் ஒரு சிக்கலும் எழுகிறது. அது என்ன என்பதும், அதை தீர்த்து இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதும் கதை.
ரொமான்டிக் காமெடி படமாகத் தயாராகியுள்ள இதன் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கும். இன்றைய தலைமுறையினர் மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். கதைக்களம் சென்னையில் நடக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தை. 87 வயது ஆர்.எம்.ஜெயராமச்சந்திரன் தயாரித்துள்ளார்” என்றார்.