

நவீன் இயக்கி, நடித்து 2013-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘மூடர் கூடம்’. வித்தியாசமான நகைச்சுவை, விநோதமான கதாபாத்திரங்கள் மூலம் கவனிக்கப்பட்ட இப்படத்தின் அடுத்த பாகம் இப்போது உருவாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் எழுதி இயக்கி, நடித்துள்ளார்.
இதில், ஓவியா, சென்ராயன், ராஜாஜி, குபேரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ரீஷ் இசையமைத் துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார். இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.
படம்பற்றி நவீன் ஹிதயத் கூறும்போது, “மூடர் கூடம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். பல ஆண்டுகளாக, இந்தப் படத்தின் 2-ம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். அதற்காக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் கதையைத் தேடிக்கொண்டிருந்தேன். ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ அந்தக் கதையாக அமைந்தது.
ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவையைத் தக்கவைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களையும், கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டு சென்றுள்ளோம்” என்றார். படத்தை கிராண்டல் பிக்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, சம்கித் போஹ்ரா தயாரித்து உள்ளனர்.