

ரிஷி காந்த், அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இதில் சேத்தன், அப்துல் லீ, பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆக. 21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறும்போது, “6 வருடத்துக்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்னது, ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான்.
ஆனால், இப்போது தமிழ் சினிமாவுக்கு சமூகப் பொறுப்போடு கூடிய ஹீரோ கிடைத்துவிட்டார். சின்ன படங்களுக்கு எப்போதுமே ஆதரவு தேவை. அது மட்டும் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார்.
நடிகர் பகவதி பெருமாள் பேசும்போது, “சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இது போன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். பலருடைய வாழ்க்கையில் இந்தப் படம் ஒளி ஏற்றி இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் படம் செய்பவர்களுக்குத் தான் பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகின்றன” என்றார்.