“என் பயணத்தில் பல விமர்சனங்கள், சவால்கள்...” -  விக்ரம் பிரபு பகிர்வு

“என் பயணத்தில் பல விமர்சனங்கள், சவால்கள்...” - விக்ரம் பிரபு பகிர்வு

Published on

“என் பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன” என்று நடிகர் விக்ரம் பிரபு விவரித்துள்ளார்.

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார், அனுஷ்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிறை’. கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது. இதன் கதையினை ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதியிருந்தார். 75 நாட்களை கடந்தும் இப்போது சில திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

மேலும், படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நினைவு பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் விக்ரம் பிரபு பேசும்போது, ”’சிறை’ படத்துக்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்டு விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும்போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு ’சிறை’ படம் ஓர் உதாரணம். இந்த மேடையில் விருது பெற்ற அனைவரும் இந்தப் படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படம் 2025 டிசம்பர் 25-ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதற்குப் பிறகு ‘டாணாக்காரன்’ படத்துக்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு இரட்டை சந்தோஷமாக அமைந்தது. இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித் குமார் சார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்த படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார்.

இந்தப் படம் எனது 25-வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு. நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சிலசமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஓர் அழுத்தமும் வந்தது. ஆனால் அதை தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன.

சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன். சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுதான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன்.

இப்போது இந்த 25-வது படத்திற்குப் பிறகு, இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று பேசினார் விக்ரம் பிரபு.

“என் பயணத்தில் பல விமர்சனங்கள், சவால்கள்...” -  விக்ரம் பிரபு பகிர்வு
“இளம் தலைமுறையினரிடம் நாங்கள்தான் கற்றுக்கொள்ள வேண்டும்” - நடிகர் தனுஷ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in