

‘‘சில்க் ஸ்மிதா ஒரு குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். ஆனால், அவரது அந்த விருப்பம் கடைசி வரை நிறைவேறவே இல்லை’’ என தனது தோழியைப் பற்றி நடிகை குஷ்பு நினைவுகூர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தனது கண்களையும் உடலையும் எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சில்க் ஸ்மிதா அறிந்தே இருந்தார். அதில் அவர் எச்சரிக்கையாகவும் இருந்தார்.
நான் அவரை ஒருபோதும் சில்க் என்றோ, ஸ்மிதா என்றோ அழைத்தது கிடையாது. விஜி என்றுதான் அழைப்பேன். விஜயலட்சுமி என்ற அவருடைய நிஜ பெயரின் சுருக்கம் அது. நான் அப்படி அழைக்கும்போது எல்லாம் அவருக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
எங்களுடைய முதல் சந்திப்பு இன்னும் நினைவிருக்கிறது. அன்று நான் இருந்த படப்பிடிப்பு தளத்தில் திடீர் ஒரு அமைதி ஏற்பட்டது. ஒரு மேஜையும், துண்டு விரிக்கப்பட்ட மடக்கு நாற்காலியும் கொண்டு வரப்பட்டது, அதில் அவர் வந்து அமர்ந்தார். நேரில் பார்க்கும் போது ஸ்மிதா கவர்ச்சியாகவும் ஒரு தனித்துவமான ஆளுமையுடனும் இருந்தார். நான் அந்த வசீகரத்தால் ஈர்க்கப்பட்டேன். உடைந்த ஆங்கிலத்தில் அவர் பேசினாலும், என்னை மிகவும் இயல்பாகவே உணர வைத்தார். அப்போது அவருக்கு 22, 23 வயதே இருக்கலாம்’’ என்றார்.
தொடர்ந்து தனது தோழியின் குணநலனையும், விருப்பத்தையும் பற்றி பேசிய குஷ்பு, ‘‘அவர் எப்போதும் தனித்தே இருப்பார். பலர் அதை அவரைத் திமிர் பிடித்தவராகத்தான் பார்த்தார்கள். அது அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், தனக்கான எல்லைகளை வரையறுத்துக் கொள்ளவும் கடைபிடித்த ஒரு யுக்தி என்றுதான் நான் கருதுகிறேன். குறைவான உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடும் ஒரு பெண்ணை இந்தச் சமூகம் எப்படி பார்க்கும் என்று உங்களுக்குத் தெரியும்தானே.
அவர் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். அவர் உறவில் இருந்த நபரால் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டார். அவர் காதலித்த நபரின் குழந்தைகளுக்கு இவரின் வயது இருக்கலாம்.
நாங்கள் வெளிநாடுகளுக்கு போகும்போது எல்லாம் அவரின் காதலரின் குழந்தைகளுக்காக அவ்வளவு ஆசையாக பொருள்கள் வாங்குவார். திரைக்கு வெளியே ஓர் இயல்பான மனைவியாக வாழ அவர் ஆசைப்பட்டார். அந்த வாழ்க்கை கடைசி வரை அவருக்கு கிடைக்கவே இல்லை’’ என்று குஷ்பு தன் தோழியை பற்றி நினைவுகூர்ந்தார்.
ஒரு துணை நடிகையாக சினிமாவுக்குள் நுழைந்த விஜயலட்சுமி, 1979-ம் ஆண்டு வெளியான ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் ‘சில்க்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். தனது 18 ஆண்டு கால திரைப் பயணத்தில் 450-க்கும் அதிகமான படத்தில் நடித்திருந்த சில்ஸ் ஸ்மிதா, இந்திய சினிமாவில் 1980-களில் வெற்றி பெற்ற கவர்ச்சி பாடல்கள் பெரும்பாலானவற்றில் இடம்பெற்றிருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி சில்ஸ் ஸ்மிதா மரணம் அடைந்தார்..
இவர் சினிமாவில் இயங்கிய காலத்தில் தென்னிந்திய சினிமாவின் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டாலும், சில்க் ஸ்மிதா மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.