

அறிமுக நடிகர் ஆதவன், ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் உள்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம், ‘கெவி’. ராசி தங்கதுரை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ள இப்படத்தைத் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பியுள்ளனர். இப்படம், டிச.12-ம் தேதி முதல் 18 வரை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள திரையரங்கு ஒன்றில் திரையிடப்படுகிறது.
இதுபற்றி தமிழ் தயாளன் கூறும்போது, “கெவி என்றால் அடிவாரம் அல்லது பள்ளம் என்று பொருள். இத்தனை ஆண்டு காலத் தமிழக வரலாற்றில் மலைக்கிராம மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கவில்லை.
அப்படிப்பட்ட ஒரு மலைக்கிராமத்தின் கதைதான் இந்தப் படம். 3 வருடங்களாக இந்த மலைக்கிராம மக்களுடன் வாழ்ந்து இந்தப் படத்தை உருவாக்கினோம்.
இப்போது ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி இருக்கிறோம். சிறந்த படப் பிரிவுக்காக அனுப்பப்பட்டுள்ள ‘கெவி’, டிச.12-முதல் 18 வரை தினமும் 3 காட்சிகள் ஓடும். இதை 1,100 பேர் கொண்ட ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்கள் வாக்களிப்பின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்” என்றார்.