

‘டோரதி’ படத்தின் முதல் கட் பார்த்து விட்டு, நல்ல படம் என இளையராஜா பாராட்டியதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தன் படத்துக்கு இசையமைக்க இளையராஜா சம்மதித்தது குறித்தும், படத்தின் இசை குறித்தும் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘இளையராஜாவின் இசை அனுபவத்தில் மூழ்குவோம்’ என்ற அந்தப் பதிவில், ‘டோரதி படத்தின் முதல் கட் காட்சிகளை இளையராஜாவிடம் காட்டிவிட்டு, அவர் என்ன சொல்வார் என்று ஆர்வத்துடன் அவரைப் பார்த்தபடிக் காத்துக் கொண்டிருந்தேன்.
சிறிய அமைதிக்கு பின்பு என்னைப் பார்த்து அவர், ‘நல்ல படம். நாளை காலையில் இருந்து வேலையைத் தொடங்கலாம்’ என்றார்.
என் படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார் என்ற உற்சாகத்தில் நான் மிதந்து கொண்டிருக்கும்போது, ‘படம் வெளியாவதற்கு முன்பு, படத்தின் பின்னணி இசையை ஓர் ஆல்பமாக நாம் வெளியிடலாம்’ என்று இளையராஜா சொன்னார்.
அப்போது என் மனம் ‘ரைட்டு அப்போ சம்பவம் கன்ஃபார்ம்’ என்று எண்ணிக் கொண்டது. ‘டோரதி’ படத்தின் ‘ஒரிஜினல் ட்ராக்’ டிஜிட்டல் முறையிலும், குறிப்பிட்ட அளவில் விநையல் ரெக்கார்டாகவும் நாளை வெளியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜாவின் 10-வது படம் ‘டோரதி’. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சனத், ரிஷிகாந்த் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் தனது தம்மம் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கிறார்.
படத்துக்கு எஸ்.திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணியை கணேஷ் சிவாவும், சண்டை பயிற்சியை தினேஷ் சுப்புராயனும் மேற்கொண்டுள்ளனர். படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது.