

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். சனந்த், ரிஷிகாந்த் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்தை, தம்மம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.
இப்படம் டொரான்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘சென்டர்பீஸ்’ பிரிவில் திரையிடப்பட்டது. 10 வருடங்களுக்குப் பிறகு இங்குத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ்த் திரைப்படம் இது. படம் முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டினர்.
இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, “நான் நெருக்கமாக அறிந்த இடத்தில் இருந்தும், கலாச்சாரத்தில் இருந்தும் உருவான கதைதான் ‘டோரதி’. இப்படம் எழுப்பும் நட்பு, பாரபட்சம் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த கேள்விகள் உலகளாவிய பார்வையாளர் களுக்கும் பொருந்தும்.
டொரன்டோ பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் சொல்ல விரும்பிய கதையின் உண்மைத்தன்மையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பை இது கொடுத்துள்ளது. மேலும், இளையராஜாவின் இசை இந்தப் பயணத்துக்குத் துணையாக இருப்பது இந்தப்படத்துக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது” என்றார்.