

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. டிசம்பர் 5-ம் தேதி வெளியீடாக இருந்த இப்படம், டிசம்பர் 12-ம் தேதி வெளியீட்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது அந்த தேதியிலும் இப்படம் வெளியாகாது என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், டிசம்பர் 18-ம் தேதி வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டு தடைக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்னும் முடியவடையவில்லை. இதனால் ‘வா வாத்தியார்’ வெளியீட்டுக்கான தடை நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் இப்படம் நாளை (டிசம்பர் 12) வெளியீடு என்பது சாத்தியமில்லை.
பல மாதங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் ஒருவழியாக டிசம்பர் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு வருவதால் இணையத்தில் ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்திடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். டிசம்பர் 18-ம் தேதி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டு வரும் இப்படம், அன்றைய தினத்திலாவது சொன்னபடி வெளியாகுமா என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.