

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படம். இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது.
சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படம் பற்றிய பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, “அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது.
உணர்வுப் பூர்வமான அரசியல் த்ரில்லராக இது உருவாகி வருகிறது. தற்போது போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார். ரவி மோகனின் 34-வது படமான இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் டப்பிங் இப்போது தொடங்கி இருக்கிறது.