

‘ஓ.ம்: ஆபரேஷன் மோல்’ படத்துக்காக நடிகை ஸ்ரீலீலாவுக்கு நடிப்பு பயிற்சி அளித்ததும், படத்தில் அவருடன் பணியாற்றியதும் மகிழ்ச்சி அளித்ததாக மூத்த நடிகை கலைராணி தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஓ.ம்: ஆபரேஷன் மோல்’. இந்தப் படத்துக்காக ஸ்ரீலீலா உள்ளிட்ட சிலருக்கு நடிப்பு பயிற்சி அளித்தது குறித்து கலைராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “இந்த திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரத்துக்கு நடிப்பு பயிற்சி பட்டறை நடத்துமாறு இணை இயக்குநர் நவீன் என்னிடம் கேட்டுக்கொண்டதில் இருந்து இது எல்லாம் தொடங்கியது. அதுவே ஸ்ரீலீலா மற்றும் சிலருக்கு பயிற்சி அளிப்பதில் நிறைவடைந்தது.
ஸ்ரீலீலாவுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது விளையாட்டுத்தனமான துடிப்பான ஆற்றல், பயிற்சியின் ஒவ்வொரு அமர்வையும் உயிர்ப்புடன் வைத்திருந்தது. அவரது கதாபாத்திரத்தை, குறிப்பாக நீண்ட வசனங்களை வெளிப்படுத்துவது அற்புதமான அனுபவமாக இருந்தது.
பின்பு எதிர்பாராத ஆச்சரியமாக படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் மற்றும் ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
அந்த கதாபாத்திரத்தை எனது பாணியில் வெளிப்படுத்த விரும்பினேன். அந்தக் கதாபாத்திரத்தை அதன் இயல்பிலேயே வெளிப்படுத்த வாய்ப்பளித்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு மிகவும் நன்றி. அவரது தெளிவு, அவதானிப்பு மற்றும் அவரது மொத்த குழுவின் முன்தயாரிப்பும் உண்மையில் உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.
இந்தப் படத்தில் நடிப்பு பயிற்சியாளர், நடிகை என இரண்டு பணிகளைச் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. ராஜ்குமார் பெரியசாமி என் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய இந்த வாய்ப்புக்கும், என்னை இதில் இணைத்த நவீன், ஒத்துழைப்பு வழங்கிய நிகில் நாயர், ஷிர்லி யுவராஜ் ஆகியோருக்கு நன்றி.
சில நேரங்களில் நீங்கள் தவறவிட்ட வாய்ப்பு எதிர்பாராத வடிவத்தில் உங்களிடம் திரும்பி வரும். இந்த முறை நான் கேமராவின் இரண்டு பக்கமும் இருக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இந்த அழகான பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கு உண்மையிலேயே நன்றி உள்ளவராக இருக்கிறேன்” என கலைராணி தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் - மம்முட்டி நடித்திருக்கும் படம் ‘ஓ.ம்: ஆபரேஷன் மோல்’. இந்தப் படத்தில் தனுஷின் மனைவியாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ளார். இவர்களுடன், சாய் பல்லவி, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு எழிலரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் நவம்பர் 20 அன்று வெளியாகி இருக்கிறது.