

இயக்குநர் ஹெச்.வினோத்
சென்னை: “இந்தியா பொய்களை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. சாதி, மதங்களை வைத்து பொய்கள் பரப்பப்படுகின்றன. ஒரு பொய், மனிதனை முட்டாளாக்கிவிடும். இதை தடுக்கச் சட்டங்கள் தேவை. ‘ஜனநாயகன்’ வெறுப்புக்கு எதிரான படம். தனி நபர்களை குறிவைத்து ‘ஜனநாயகன்’ எடுக்கப்படவில்லை” என அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஜனநாயகன்’ படத்துக்கு நிறைய தடைகள், பிரச்சினைகள் இருக்கின்றன. இதைத் தாண்டி மக்கள் இப்படத்துக்கு ஆதரவு தர வேண்டும். ‘ஜனநாயகன்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் வருத்தம்தான். ஆனால் இதை எதிர்த்து போராட எங்களுக்கு நேரமில்லை.
விஜய் மீது மக்கள் வைத்துள்ள அன்புக்கு மிகப்பெரிய நன்றி. ‘ஜனநாயகன்' திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க காத்திருக்கும் மக்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். பல இயக்குநர்கள் இருந்தாலும், ‘ஜனநாயகன்’ படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு அளித்த விஜய்க்கு நன்றி.
விஜய்க்கு தனது கடைசிப் படம் இப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் இருந்திருக்கலாம். பல கதைகளை கேட்ட பிறகு விஜய் இந்த படத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் பெண் முன்னேற்றத்தின் மீதான அவரது தீவிர ஆர்வம் தான்.
’ஜனநாயகன்’ படத்தில் பெரிய அளவிலான காட்சிகள் எதுவும் மாற்றப்படவில்லை. சிறிய அளவிலான சில காட்சிகள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. ‘ஜனநாயகன்’ வெறுப்புக்கு எதிரான படம். ஒற்றுமையை பேசும் படம். வெறுப்புக்கு எதிரான படத்தின் மீது வெறுப்பை திணிப்பது சரியில்லை. எங்களுக்கு அநீதி நடந்திருக்கிறது. அதைச் சொல்ல எங்களிடம் ஆதாரம் இல்லை. அதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
தணிக்கை வாரியம் மீது எந்தக் கோபமும் இல்லை, தணிக்கை வாரியம் மட்டுமே படத்தை தடுத்திருக்க முடியாது. இந்தியா பொய்களை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. சாதி, மதங்களை வைத்து பொய்கள் பரப்பப்படுகின்றன. ஒரு பொய், மனிதனை முட்டாளாக்கிவிடும். இதை தடுக்கச் சட்டங்கள் தேவை.
விஜய்க்கு பல்வேறு பிரச்சினைகள் வந்தன. பூத் அரசியல், ஓட்டுக்கு பணம் கொடுப்பது எனப் பல விஷயங்கள் பேசப்பட்டன. ஆனால் மக்கள் இதையெல்லாம் உடைத்திருக்கிறார்கள்.
இது ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் எந்தவொரு தனி நபரையோ, கட்சியையோ, அமைப்பையோ குறிவைத்து எடுக்கப்பட வில்லை. சமூகத்தின் மீதான வருத்தங்கள், பிரச்சினைகள் சார்ந்தது. தனிநபர்களை தாக்கக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருந்தார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.