‘ஜனநாயகன்’ வெளியாகாதது வருத்தமே: ஜீவா

‘ஜனநாயகன்’ வெளியாகாதது வருத்தமே: ஜீவா
Updated on
2 min read

‘ஜனநாயகன்’ படம் வெளியாகாதது குறித்து எங்களுக்கும் வருத்தம் தான் என்று ஜீவா தெரிவித்துள்ளார்.

நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படம், ‘ஜனநாயகன்’ வெளியீடு தாமதமானதால், ஜனவரி 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் ஜீவா பேசும் போது, “’தலைவர் தம்பி தலைமையில்’ உண்மையில் ஒரு மேஜிக் தான். நடிகரும், நண்பருமான வி.டி.வி கணேஷ் ஏப்ரல் மாதத்தில் வீட்டிற்கு வந்து மலையாளத்தில் வெளியான ’ஃபேலிமி’ எனும் திரைப்படத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். அந்தத் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யலாம் என அப்படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் முன்பே கேட்டிருந்தார். சில காரணங்களால் அது நடைபெறவில்லை.

’‘ஃபேலிமி’ இயக்குநர் ஒருநாள் என்னை சந்தித்து கதையை சொன்னார். அக்கம் பக்கத்தில் உள்ள இரண்டு குடும்பம், அவர்களுக்குள் ஏற்படும் ஒரு பிரச்சனை, நீங்கள் நடுவராக இருந்து அந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வை கொடுக்கிறீர்கள்? என்பதுதான் கதை என்றார். அவர் சொன்ன விதம் எனக்கு உடனே பிடித்திருந்ததாலும் அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்ததாலும் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

முதலில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டோம். அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை கம்பம் பகுதிக்கு மாற்றினோம். அங்கே அரங்கம் அமைத்து 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். இந்தப் படத்தில் தண்ணீர் தொட்டி ஒரு கதாபாத்திரமாக இடம் பிடித்திருக்கிறது. அதனையும் உருவாக்கினோம். சிறிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு ஆனால் தயாரிப்பாளரின் விருப்பத்தினால் தாராளமான செலவில் படம் உருவாகி இருக்கிறது. என்னுடைய 45 ஆவது படத்தில்.. 46 நடிகர்களுடன் நடித்த அனுபவம் எனக்கு கிடைத்தது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் புது முகங்கள் அனைவரும் ஏற்கெனவே யூடியூப் மூலமாக பிரபலமானவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அவர்களுக்கு ஏற்ற வகையிலும் திரைக்கதையும், வசனங்களையும் அமைத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக இந்த படத்தில் ஏராளமான யங் எனர்ஜி இருக்கிறது.

இயக்குநர் நிதிஷ் எழுதிய இந்த கதையில் எங்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. நாங்கள் திரையில் கதாபாத்திரத்தை உணர்த்து தீவிரமாக நடித்துக் கொண்டிருப்போம். ஆனால் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் 'இப்படி எல்லாம் நடக்குமா..! ' என ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். தம்பி ராமையா, இளவரசு என எல்லோரும் இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக பணியாற்றி இருக்கிறார்கள்.‌

இந்த படத்தில் பணியாற்றிய போது என்னுடைய சின்ன சின்ன ஆலோசனையும் இயக்குநருக்கு வழங்கினேன். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு புது முயற்சி, ஒரு புது ட்ரீட்மென்ட், புது வகையிலான நெரேட்டிவ். இது தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ளவர்களும் இதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஜனவரி 30 ஆம் தேதி தான் இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் எங்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘ஜனநாயகன்’ படம் வெளியாகாதது குறித்து எங்களுக்கும் வருத்தம் இருக்கிறது. இருந்தாலும் அதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நடிகர் விஜய் ஏராளமான தயாரிப்பாளர்கள்- தொழில்நுட்ப கலைஞர்கள்- நடிகர்களுக்கு- பெரிய ஆதரவாக இருந்திருக்கிறார்” என்று பேசினார் ஜீவா.

‘ஜனநாயகன்’ வெளியாகாதது வருத்தமே: ஜீவா
‘ஜனநாயகன்’ விவகாரத்தில் விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவுக் குரல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in