

அறிமுக இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா, ஸ்ரத்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், செப். 25-ல் வெளியாகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தை டி.ஜி.தியாகராஜன் வழங்குகிறார். மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக இது உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தனஞ்செயன், சுஜாதா விஜயகுமார், அருள்பதி, இயக்குநர்கள் பி.வாசு, கண்ணன், பத்ரி, நடிகர் இளவரசு, நடிகை அர்ச்சனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் இளையராஜா பேசும்போது, “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்போதும் நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிப்பவர். நான் தினமும் சரியாக 7 மணிக்கு ஸ்டூடியோவுக்கு செல்வேன். ஒருநாள், 5 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. காரில் இருந்து இறங்கும்போது சிவாஜி அண்ணா நின்றுகொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும், ‘ராஜா, நீயுமா லேட்டு?’ என்று கேட்டார். இத்தனை ஆண்டுகளாக நேரத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்னை விடச் சீக்கிரம் வந்து, என்னிடமே இப்படிக் கேட்கிறாரே என்று அந்த நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
நடிப்பைப் பற்றி அவர் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். ஒரு நடிகர் புதிதாக அறிமுகமாகும்போது, ‘யாருப்பா இது?’ என்று ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு இருக்க வேண்டும். அதன்பிறகு அந்த நடிகரைப் பார்த்து, ‘யாரு இந்த ஆள்?’என்று வியக்கும் அளவுக்கு அவரது நடிப்பு வளர வேண்டும். அப்படிப்பட்ட மிகப்பெரிய கலைஞர் சிவாஜி கணேசன்.
அவருடைய குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தர்ஷனின் நடிப்பை இந்தப் படத்தில் பார்த்தேன். சிவாஜி அண்ணாவின் பெயரையும், அந்த நடிப்பு வம்சாவளியையும் காப்பாற்றும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். என் தம்பி கங்கை அமரனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இவன் என்கிட்டயே நடிப்பான். நிஜமாகவே தம்பியும் நன்றாக நடித்திருக்கிறான்”என்றார்.