

நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படம் ‘தர்மன்’. கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர் நேஷனல் தயாரிக்கும் இப் படத்தை ஆர்.மகேந்திரன் இணை தயாரிப்பு செய்கிறார்.
‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். நிகேஷ் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். சிம்ரன், ராசி கன்னா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் தொடக்க விழா ஜூன் 24ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது.
இப்படத்தின் புதிய போஸ்டரை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள படக்குழு, படப் பிடிப்பு தொடங்கி இருப்பதை அறிவித்துள்ளது. “தனித்துவமே அவரது அடையாளம், கெட்டப் பையன் சார். தர்மன் படப்பிடிப்பு தொடங்கி விட்டது” என்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய போஸ்டர் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கிடையே ‘குட் டாக்டர்’ என்ற அமெரிக்க டிவி சீரியல் தொடரின் உரிமையை வாங்கி இப்படத்தை உருவாக்குவதாக சமூக வலை தளங்களில் வெளியான தகவலை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார்.