‘சிறை’ வேறு மொழியில் வெற்றியை அடைந்திருக்குமா?- இயக்குநர் வெற்றிமாறன் சந்தேகம்

‘சிறை’ வேறு மொழியில் வெற்றியை அடைந்திருக்குமா?- இயக்குநர் வெற்றிமாறன் சந்தேகம்
Updated on
2 min read

’சிறை’ வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசினார்.

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார், அனுஷ்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிறை’. கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது. இதன் கதையினை ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதியிருந்தார். 75 நாட்களை கடந்தும் இப்போது சில திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நினைவு பரிசு வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, “பெரிய ஸ்டார் பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல.

இப்படிப்பட்ட ஒரு படத்தை நம்பி தயாரித்து, முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும். படம் வெளியான பிறகும் தொடர்ந்து அதை புரொமோட் செய்து, சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றது மிகப்பெரிய விஷயம். தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கையால்தான் இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது என்று நான் நினைக்கிறேன். நான் படம் பார்த்த பிறகு அவரிடம் ‘படம் மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக திரும்ப வரும்’ என்று சொன்னேன். ஆனால் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதையும் தாண்டி இருந்தது.

உண்மையில் அவரது நம்பிக்கையை விட அதிகமாகவே இந்த படம் ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இருக்கும் உண்மை, அதில் உள்ள உணர்வு, எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு. உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.

அதை ஒரு திரைக்கதையாக மாற்றி, தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல. அந்த பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார். அவரது வேலை செய்யும் விதம், குழுவை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை.

அதனால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும், நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் சிறப்பான விஷயம்.

நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் சிறந்த ரசனையுடையவர்கள். இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது. இந்த படத்தில் தமிழும் சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது.

வெற்றி கிடைக்கும் போது ‘இதற்கு நான் தான் காரணம்’ என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல், ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம். இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு, விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான விஷயம். இந்த குழுவில் உள்ள பலரையும் அவர்கள் கல்லூரி முடித்து வந்த காலத்திலிருந்தே நான் பார்த்திருக்கிறேன்.

அப்போது அவர்களுடைய கலைத்திறன் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் அவர்கள் எடுத்த படங்களைப் பார்க்கும் போதெல்லாம் ‘இவ்வளவு நல்லா பண்ணுறாங்களா?’ என்று எனக்கு ஆச்சரியம் தோன்றுகிறது. அது எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சுரேஷ் என்னுடன் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்தபோது ஒரு சாதாரண இயக்குநர்–உதவி இயக்குநர் உறவு தான் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது ஒரு நல்ல நட்பாக மாறியது. அவர் எதை எடுத்தாலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார்.

ஒரு விஷயத்தில் முழு நம்பிக்கை இருந்தால் அதில் முழுமையாக இறங்குவார். முடியாது என்று நினைத்தால் நேராக சொல்லிவிடுவார். அந்த நேர்மையும் அர்ப்பணிப்பும் தான் அவரது சிறப்பான குணம். இந்த படத்தின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குழுவில் இருக்கும் இளைஞர்கள் இப்படி நல்ல படங்களை உருவாக்கும்போது அது எனக்கு பெருமையாக இருக்கிறது.

அவர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட சிறந்த முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெற்றி கிடைத்த பிறகு பல விஷயங்கள் நம்மை சுற்றி வரும். ஆனால் எப்போதும் நாம் ஆரம்பித்த இடத்தை மறக்காமல், நிலையாக இருந்து, நம்மைப் போலவே இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதுதான் மிக முக்கியம்” என்று பேசினார் இயக்குநர் வெற்றிமாறன்.

‘சிறை’ வேறு மொழியில் வெற்றியை அடைந்திருக்குமா?- இயக்குநர் வெற்றிமாறன் சந்தேகம்
‘கொஞ்சமாவது ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட் வேண்டாமா?’ - மெஹதி ஹசனுக்கு சல்மான் அகா கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in