

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் சிறப்பு தோற்றதில் நடித்த ராடி கதாபாத்திரத்தின் தீம் இசையை பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பகிர்ந்துள்ளார்.
ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர் 2’ படம் அக்டோபர் 15 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன், ரம்யா கிருஷ்ணன், நமோ நாராயணன், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்டோர் கவுரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
‘ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹ்ரித்திக் ரோஷன் கவுரவ தோற்றம் பெரும் ரகசியமாகவே பேணப்பட்டது. படத்தின் ட்ரெயிலர் வெளியானபோது கூட, ஹ்ரித்திக் படத்தில் இல்லை, அவரின் காட்சிகள் மின்னலாக வந்து போகிறது என சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.
ஆனாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனமோ, ஹ்ரித்திக் ரோஷனோ மவுனம் காத்து வந்தனர். படம் வெளியானாதும் படத்தை முதலில் பார்த்த பார்வையாளர்கள் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஹ்ரித்திக் ரோஷன், ‘ஜெயிலர் 2’ படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியனுக்கு உதவி செய்யும் ராடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது, சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் ராடி கதாபாத்திரத்தின் தீம் இசையை ஹ்ரித்திக் ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘பரவசமூட்டும் ராடி தீம் இசை உங்களை ஆட்கொள்ளட்டும். இப்போது வெளியாகி விட்டது’ என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1986-ல் வெளிவந்த ‘பகவான் தாதா’ படத்துக்கு பிறகு, ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியும் ஹ்ரித்திக்கும் இணைந்து நடித்துள்ளனர். அந்தப் படத்தில் இளம் வயது ஹ்ரித்திக்கின் வளர்ப்பு தந்தையாக ரஜினிகாந்த் நடித்திருந்தார்.